Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மூன்றாவது பாலினமாக தங்களை அடையாளப்படுத்தி கணக்கெடுக்குமாறு திருநங்கையர் கோரிக்கை.

இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சென்ற வாரம்   துவங்கியிருக்கிறது.

  இந்திய நடுவணரசினால் பெரும் முன்னெடுப்பில் செய்யப்பட்டுவரும் இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், ஆண், பெண் தவிர மூன்றாவது பாலினமாக அரவாணிகள் என்றழைக்கப்படும் திருநங்கையரும் கணக்கெடுக்கப்படவேண்டும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர். மு. கருணாநிதி இந்திய பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

தங்கள் சார்பில் தமிழக முதல்வர் விடுத்திருக்கும் இந்த நியாயமான கோரிக்கைக்கு இந்திய நடுவணரசு செவிசாய்க்க வேண்டும் என்று திருநங்கைகளுக்கான அமைப்புக்கள் கோரியுள்ளன.

தங்களின் பாலின அடையாளம் தொடர்பான சிக்கல்கள் காரணமாக பெரும்பாலான திருநங்கையர் பள்ளிப்படிப்பைக்கூட முடிக்க முடியாத சூழல் இந்தியாவில் நிலவுவதாக கூறும் திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள், திருநங்கையர்களுக்கு அரசின் கல்விநிலையங்கள் மற்றும் வேலைவாய்ப்புக்களில் இட ஒதுக்கீடு அளிப்பது தான் அவர்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான நிரந்தர தீர்வாக அமையும் என்றும் கூறுகிறார்.

அத்தகைய இடஒதுக்கீட்டை அளிப்பதற்கு அடிப்படையாக இந்தியாவில் எத்தனை திருநங்கையர் இருக்கிறார்கள் என்கிற புள்ளிவிவரம் தேவைப்படும் என்றும், தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பில் திருநங்கையர் குறித்த கணக்கெடுப்பும் சேர்க்கப்படுவதே அதற்கான முதற்படியாக இருக்கும் என்றும் வித்யா கூறுகிறார்.

Exit mobile version