Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மூத்த கவிஞர் இ.முருகையன்:கண்ணீர் அஞ்சலி!

                               மூத்த கவிஞர் இ.முருகையன்

                                  (23-04 -1935     – 27 -06 -2009)

தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவரும் ஈழத்தின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவருமான இ. முருகையன் அவர்களது பிரிவுச் செய்தி தேசிய கலை இலக்கியப் பேரவையைப் பெருந் துயரில் ஆழ்த்தியுள்ளது.

 தேசிய கலை இலக்கியப் பேரவையின் தொடக்கத்திலிருந்து அதற்குத் துணையாயிருந்து இளம் படைப்பாளிகளை நெறிப்படுத்தி ஊக்குவித்ததில் அவரது பங்களிப்பு மிகப் பெரிது. தேசிய கலை இலக்கியப் பேரவையின் சஞ்சிகையான தாயகத்தின் ஆசிரியர் குழுவிற் பெரும் பொறுப்பேற்றுச் செயற்பட்டு வந்ததுடன் அதன் நூல் வெளியீடுகளிலும் அவர் ஆக்கபூர்வமான ஒரு வழிகாட்டியாயிருந்தார்.

மூத்த கவிஞர் முருகையன் கவிஞராக மட்டுமன்றித் தமிழறிஞராகவும் திறனாய்வாளராகவும் சீரிய முற்போக்குச் சிந்தனையாளராகவும் அறியப்பட்டவராவார். அரசகரும மொழித் திணைக்களத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் தமிழ்க் கலைச் சொல்லாக்கத்திற்கு அவர் ஆற்றிய சேவை முன்னோடியானதும் முற்போக்கானதுமாகும். அவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் உதவிப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
அவரது கவிதைகள் போன்று மொழி, சமுகம், அரசியல் ஆகிய துறைகளில் அவரது கட்டுரைகளும் மிகுந்த தெளிவும் ஆழமும் சமூகப் பயனுமுடையவையுமாவன. அவர், தன்னைச் சூழத் தவறுகள் நடந்த போதெல்லாம் அவற்றைக் கண்டிக்த் தயங்காது காய்தல் உவத்தலியன்றி ஆக்கமான விமர்சனங்களை முன்வைத்து வந்தவருமாவர். அவரது பிரிவு தமிழ் இலக்கிய உலகிற்கும் சமூக விடுதலைச் சிந்தனையாளர்கட்கும் தமிழ் அறிவுத் துறைக்கும் ஒரு பேரிழப்பாகும்.

அவரது பிரிவால் வருந்தும் அவரது மனைவியார்  தவமணிதேவி அவர்கட்கும் பிள்ளைகட்கும் குடும்பத்தினருக்கும் தேசிய கலை இலக்கியப் பேரவை தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவருக்கான இறுதி அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதில் அவருடைய நண்பர்களுடனும் உறவினர்களுடனும் இணைந்து, தனது ஆழ்ந்த துயரை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறது.

       (சோ. தேவராஜா)         பொதுச் செயலாளர்

Exit mobile version