இலங்கை கிரிமினல் அரசு முஸ்லீம் மக்கள் மீதான தொடர் தாக்குதல்களை நிறுவன மயப்படுத்தப்பட்ட வகையில்
அனுராதபுரம், மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசல் அனுராதபுரம் மாநகர சபையினரால் இன்று அகற்றப்பட்டுள்ளது.
இப் பள்ளிவாசல் கடந்த ஒரு வருடத்தில் இலங்கை அரச பாசிஸ்டுகளின் குண்டர்படைகளால் இரண்டுதடவை தாக்குதலுக்கு உள்ளானது.
போரின் போது தோற்றுவிக்கப்பட்ட இராணுவப் பொருளாதாரத்தை அமரிக்கா, இந்தியா உடப்ட ஏனைய ஏகாதிபத்திய நாடுகள் நிதி வழங்கி ஊக்குவித்தன. போரின் பின் இராணுவப் பொருளாதாரம் அழிக்கப்பட வேலையின்மையும் வறுமையும் ஏனைய தெற்காசிய நாடுகளோடு ஒப்பிடும் போது பல மடங்காக அதிகரிதுள்ளன. தற்கொலை வீதம் 40 மடங்காக அதிகரித்துள்ளது. ஐ.எம்.எப் போன்ற கந்துவட்டி நிறுவனங்களிலும் உலக வங்கியிலும் பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டலிலும் இலங்கை தங்கியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இலங்கை அரசினதும் பல்தேசிய நிறுவனங்களதும் கொள்ளைக்கு எதிராக மக்கள் போராட முனைகின்றனர்.
இப் போராட்டங்களைக் கண்டு அஞ்சும் இலங்கை அரசு அவற்றைத் திசை திருப்ப சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. தனது குண்டர் படைகளூடாக ஆயுதப்படைகளின் பாதுகாவலுடன் இத் தாக்குதல் நடத்தப்படுகின்றது. பொது பல சேனா போன்ற சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்புக்க்களை அரசே தோற்றுவித்து முஸ்லிம் தமிழர்கள் மீதும் ஏனைய தேசிய இனங்கள் மீதும் இத் தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கையின் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களான வடகிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம் தமிழர்கள் இன் ஒன்றிணைந்த போராட்டம் அவசியமானது. சிங்கள மக்களின் போராட்டங்களைத் திசைதிருப்பி அவர்களை ஒடுக்குவதற்காகவே இலங்கை அரசு சிறுபான்மைத் தேசிய இனங்களை ஒடுக்குகிறது என்று அவர்களுக்குச் சொல்லப்பட வேண்டும். இதன் மறுபுறத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தை இனவாதப் போராட்டமாக்கி ராஜபக்ச அரசின் நோக்கங்களை நிறைவேற்றும் இலங்கை இந்திய தமிழ்த் தேசிய பிழைப்புவாதிகள் அரசியல் நீக்கம் செய்யப்படவேண்டும்.