Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலைகளை மோடி திட்டமிட்டு நடத்தினார் – நேரடிச் சாட்சி கைது

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை அனுமதிக்குமாறு முதல்வர் நரேந்திர மோடி அம்மாநில காவல்துறைக்கு உத்திரவு வழங்கியதாக உச்சநீதிமன்றத்தில் சாட்சிப் பிரமாணம் அளித்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவியில் இருக்கும் சஞ்சீவ் பட், தனக்கு கீழ் பணிபுரிந்த ஒரு காவல்துறை அதிகாரியிடம், மோடிக்கு எதிராக சாட்சியமளிக்கும்படி பலவந்தப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த புகார் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக குஜராத் அரசு தரப்பில் கூறப்படுகிறது.
குஜராத் மாநிலத்ததின் முன்னாள் டி ஜி பி ஸ்ரீகுமார். நரேந்திரமோடிக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் வரை சென்று சாட்சியமளித்ததற்காகவே சஞ்சீவ் பட் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.
குஜராத் மதக்கலவரங்களை நரேந்திரமோடி தான் திட்டமிட்டு நடத்தினார் என்று முதன்முதலில் கூறிய தான் பதவி உயர்வு அளிக்கப்படாமலும், ஓய்வூதியம் வழங்கப்படாமலும் பழிவாங்கப்பட்டதாக கூறும் ஸ்ரீகுமார், அதே போல சஞ்சீவ் பட்டும் நரேந்திரமோடிக்கு எதிராக சாட்சியமளித்ததற்காக தற்போது பழிவாங்கப்படுவதாகக் கருதுகிறார்.
குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி தலைமையில் 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி மாலை நடத்திய கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்துகொண்டதாக தெரிவிக்கிறார் ஸ்ரீகுமார். சட்டம் ஒழுங்கு குறித்து ஆராய்வதற்காக கூட்டப்பட்ட அந்த கூட்டத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பதிலடியாக, முஸ்லீம்களுக்கு எதிராக ஹிந்துக்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளை நடத்துவதற்கு மூன்று நாட்கள் அனுமதிக்கப்படவேண்டும் என்றும் அவர்களை காவல்துறை தடுக்கக்கூடாது என்றும் நரேந்திரமோடி உத்தரவிட்ட தகவலை சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டார் என்பது தான் அவர் மீது நரேந்திரமோடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் கோபம் வரக்காரணம் என்கிறார் ஸ்ரீகுமார். ஆனால் சஞ்சீவ் பட்டின் இந்த சாட்சியத்தை மோடி தரப்பு மறுத்துவருகிறது.
ஆனாலும், நரேந்திரமோடிக்கு எதிரான சஞ்சீவ் பட்டின் சாட்சியம் மிக மிக முக்கியமானது என்கிறார் ஸ்ரீகுமார். “குஜராத் கலவரங்களை வடிவமைத்து, சதித்திட்டம் தீட்டி, நடத்தி முடித்தவர் நரேந்திரமோடிதான் என்பதற்கான ஒரே நேரடி சாட்சியமாக சஞ்சீவ் பட் இருக்கிறார். மோடியின் ஆணையின்படியே காவல்துறை அதிகாரிகள் எல்லாம் செயற்பட்டார்கள் என்பதற்கான ஒரே நேரடி சாட்சியமாக சஞ்சீவ் பட் இருக்கிறார். அதனால் தான் அவரை குறிவைத்து பழிவாங்குகிறார்கள். இதில் மேலும் கவலை தரும் விடயம் என்னவென்றால், இந்த பிரச்சினைக்காக, ராகவன் தலைமையில் உச்சநீதிமன்றம் நியமித்திருக்கும் சிறப்பு புலனாய்வுக்குழுவும் குஜராத் அரசாங்கத்தோடு ஒத்துப்போகிறதே தவிர, உண்மையை வெளிக்கொண்டுவர மறுக்கிறது. குஜராத் அரசு போட்டுக்கொடுக்கும் செயற்திட்டத்திற்கேற்ப இவர்களின் புலனாய்வு சென்று கொண்டிருக்கிறது. இந்த பின்னணியில், நான் எப்படி தனி மனிதனாக நீதிமன்றம் போய் எனக்கான நியாயத்தை பெற்றேனோ, சஞ்சீவ் பட்டுக்கும் அது தான் ஒரே வழி. வேறு வழியில்லை,” என்கிறார் குஜராத் முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார்.

Exit mobile version