முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட
ஆணைக்குழு ஒன்றை நிறுவுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது முஸ்லிம் மக்களுக்கு நேரடியான பாதிப்புக்கள் எதுவும் ஏற்படாத போதிலும், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் 20000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே இந்த சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
உள்நாட்டு வெளிநாட்டு சமூகங்கள் யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட சிங்கள தமிழ் மக்கள் பற்றி மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு கூட 2002ம் ஆண்டுக்கு முன்னதாக இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகள் குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதே தமது நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
1990ம் ஆண்டில் சில மணித்தியாலங்களில் ஆயிரக் கணக்கான முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக வெளியேற்றியிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம் மக்களுகளைத் தமது பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து தமிழீழ விடுத்லைப் புலிகள் வெளியேற்றியமை இனச்சுத்திகரிப்பே என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. அவர்கள் மீளக் குடியேற்றப்பட வேண்டும். அதற்காக தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் நிபந்தனையின்றி தமது ஆதரவை வழங்கவேண்டும். ஆனால், யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் காரணம்காட்டி மகிந்த பாசிஸ்டுக்கள் முஸ்லிம் தமிழர்கள் மீது நிகழ்த்தும் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பை மறைக்க முயல்வது நீதியற்றது. முஸ்லிம் பள்ளிவாசல்கள் இடிக்கப்படுவதும், அவர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் மீது மகிந்த ராஜபக்ச அரசு நடத்தும் திட்டமிட்ட அழிப்பு இன்று நாட்டின் எரியும் பிரச்சனைகளில் ஒன்று என்பது குறித்து ஹசன் அலி துண்டறிக்கை கூட வெளியிட்டதில்லை.