அம்பாறையில் 31 முஸ்லிம் விவசாயக் குடும்பங்களுக்குச் சொந்தமான காணிக்குரிய அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்யுமாறு அரசாங்க அதிபர் உத்தரவு.
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அஷ்ரப் நகர் ஆலிம் சேனை பால்கனிவட்டையைச் சேர்ந்த 31 முஸ்லிம் விவசாயக் குடும்பங்களுக்குச் சொந்தமான 67 ஏக்கர் காணிக்குரிய அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்யுமாறு பிரதேச செயலாளருக்கு கடிதம் மூலம் அம்பாறை அரசாங்க அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். குறிப்பிட்ட காணிகளுக்குரிய அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்காமையைக் காரணங் காட்டியே அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
குறிப்பிட்ட காணிகளை 1980 களிலிருந்து விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள். யுத்த நிலைமைகள் காரணமாக குறிப்பாக 1990 இல் 13 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதன் பின் காணிகளைப் பராமரிக்க முடியாது போனதுடன் அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கவும் முடியாது போனது. யுத்தம் முடிவடைந்த பின் தற்போது தமது காணிகளை விவசாயிகள் மீண்டும் பயன்படுத்தி வருகிறார்கள். அண்மையில் யானைப் பாதுகாப்பிற்காக வேலியொன்றை அமைக்க முற்பட்ட போது, அதனை எதிர்த்த விவசாயிகளின் அனுமதிப் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டு காணி ஆணையாளருக்கு அனுப்பப்பட்டதன் பின்பு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யுத்த காலப்பகுதியில் பலர் தமது காணிகளைப் பராமரிக்க முடியாது கைவிட்டிருந்ததுடன் காணிக்குரிய அனுமதிப் பத்தரித்தினையும் புதுப்பிக்காது இருந்தனர். இவ்வாறான நிலைமைகள் அம்பாறை தீகவாபி போன்ற சிங்களப் பகுதிகளிலும் காணப்படுகிது. ஆயினும் இனவாத நோக்கில முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.