திருமணப்பதிவிற்குச் செல்லும் போதே இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுவதாகவும், மூன்றாவது குழந்தை பிறந்தால் பாடசாலைக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும் இவை 2005 ஆம் ஆண்டு முதலே பௌத்த அடிப்படைவாத அரசால் கடைப்பிடிக்கப்படுவதாகவும் அந்த அமைப்புக் கூறியுள்ளது. இலங்கையைப் போன்று தேரவாத பௌத்தத்தைப் பின்பற்றும் பர்மாவில் ஏனைய மதத்தவரை எதிரிகளாகக் கருதும் நிலை காணப்படுகிறது.
பழைமைவாத பௌத்தமான தேரவாத பௌத்தம் இயல்பிலேயே அடிப்படைவாதக் கருத்துக்களைக் கொண்டுள்ளதாக ஹொப்ஸ்பவம் உட்பட பல ஆய்வாளர்கள் வாதங்களை முன்வைத்துள்ளனர். மறு புறத்தில் தேரவாத பௌத்தம் சமூகத்திலிருந்து அன்னியமான கருத்துக்களைக் கொண்டிருப்பதால் அதனை பின்பற்றும் உழைக்கும் பிரிவினரே அதன் கருத்துக்களோடு முரண்படும் நிலை வளர்ந்துவருகின்றது.
மேற்கு நாடுகளால் ஜனநாயக வாதியாகயும் பர்மாவின் ஜனநாயகத்தின் சின்னமாகவும் புனையப்பட்ட அங் சாங் சுகி போன்றவர்கள் முஸ்லிம்களின் இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிப்பிற்கும் எதிராகக் குரல்கொடுப்பதில்லை.
வழமைபோல முஸ்லிம் மக்கள் மத்தியிலிருந்து எழக்கூடிய போராட்டங்களைத் தடுப்பதற்காக ஐ.நா உட்பட தன்னார்வ நிறுவனங்கள் அவ்வப்போது குரல் கொடுப்பது வழமை.