Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்தும் வடபகுதிக்கு வேறுபட்ட தீர்வு ஒன்றை வழங்குவதற்கு அனுமதிக்கப் போவதில்லை!:மகிந்த

 

  அரசியல் தீர்வொன்றை வழங்க வேண்டிய தேவை இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். அதேசமயம், நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்தும் வடபகுதிக்கு வேறுபட்ட தீர்வு ஒன்றை வழங்குவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். முழு நாடும் ஒரு முறைமையைக் கொண்டிருப்பது அவசியமென்றும் வடக்கிற்கு ஒன்றும் கிழக்கிற்கு ஒன்றும் என்ற முறைமையைக் கொண்டிருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

“ரைம்’ சஞ்சிகைக்கு மகிந்த ராஜபக்ஷ அளித்த பேட்டி நேற்று திங்கட்கிழமை வெளியாகியுள்ளது. பேட்டி இங்கு தரப்படுகிறது;

ரைம்: இலங்கையில் பிரபாகரன் இப்போது நடைமுறை ரீதியில் ஐதீகமானவராக உருவாகியுள்ளார். அவர் கொல்லப்பட்டுள்ளதை நீங்கள் கேள்விப்பட்டவுடன் தங்கள் மனதில் என்ன நினைத்தீர்கள்?

ஜனாதிபதி ராஜபக்ஷ: கடவுளுக்கு நன்றி, மும்மணிகளுக்கு நன்றி, அது ஒரு கொடையாக இருந்தது.

ரைம்: அவர் எவ்வாறு இறந்தார்?

ஜனாதிபதி ராஜபக்ஷ: அவர் சுடப்பட்டு இறந்தார் அவ்வளவு தான். அவர் எவ்வாறு சுடப்பட்டார் என்பது குறித்து கண்டுபிடிக்க நான் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அதற்கு யாராவது பொறுப்பாக இருந்தால் அவர் சில உபகாரத்திற்கு உரித்தானவர். அவர் (பிரபாகரன்) இப்போது இல்லையென்பதே மிகவும் முக்கியமான விடயம். அவரை இங்கு கொண்டுவந்து அவருடன் கதைத்திருப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்திருந்திருப்பேன். நான் அந்த மனிதரை ஒருபோதும் பார்த்ததில்லை.

ரைம்: அவரிடம் எதனை கேட்டிருந்திருப்பீர்கள்?

ஜனாதிபதி ராஜபக்ஷ: இந்த மாதிரியான மடமைத்தனமான விடயங்களை ஏன் அவர் செய்தார். வேறு என்ன விடயத்தை அவரிடம் நான் கேட்கமுடியும்.

ரைம்: விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி நடவடிக்கைகளின் போது யுத்தநிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களிடமிருந்து உங்களுக்கு கணிசமான அளவு அழுத்தங்கள் அதிகரித்திருந்தது. நீங்கள் அந்த அழுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தீர்கள். இப்போதும் இவர்களில் சிலர் தங்களின் பாரிய வர்த்தக பங்காளிகளாக உள்ளனர். அந்த உறவிற்கு ஆபத்து ஏற்படுகின்றது என்பது குறித்து நீங்கள் கவலையடைந்துள்ளீர்களா?

ஜனாதிபதி ராஜபக்ஷ: அவர்கள் மிகவும் குறுகிய மனப்பான்மை உடையவர்கள் என நான் நினைக்கவில்லை. பயங்கரவாதத்தை தோற்கடிக்குமாறு எம்மை ஊக்குவித்தவர்கள் அவர்கள். புஷ் கூறியவற்றை நாங்கள் பின்பற்றினோம். அவர் விரும்பியவற்றை நாங்கள் நிறைவேற்றினோம். பயங்கரவாதத்தை அழித்தோம். அவர்கள் எமக்கு நற்சான்றிதழ் வழங்குவது அவசியமாகும். நாம் அவர்களின் யுத்தத்தை செய்தோம். பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியும் என உங்களுக்கு நாம் காட்டியுள்ளோம்.

ரைம்: மோதலுக்கு இடையில் சிக்கியிருக்கும் பொதுமக்களை பாதுகாப்பதற்கான பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உடையது என்ற கொள்கைக்கு பரீட்சையாக யுத்தத்தின் இறுதிக் கட்டமானது அமைந்ததாக சில வெளிநாட்டு கொள்கை ஆய்வாளர்கள் கருதுகின்றனரே?

ஜனாதிபதி ராஜபக்ஷ: இது எனது பிரஜைகள். அவர்களுக்குரிய பொறுப்பு என்னுடையது. அவர்களை நான் பாதுகாத்து வெளியே கொண்டுவர வேண்டும். சில வெளிநாடுகளை இதற்கென அனுமதித்து அதனைச் செய்வதற்கு நான் இடமளித்தால் அவர்கள் அநேகமான மக்களை கொண்டிருப்பார்கள். எனது பிரஜைகளை எனது படைவீரர்கள் பாதுகாப்பார்கள். அவர்கள் எனது மக்கள், அவர்கள் எனது வாக்காளர்கள். மக்களால் உரிய முறையில் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் உதவுவது அவசியமாகும்.

ரைம்: தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமொன்று அதன் சொந்த மக்களுக்கு எதிராக செயற்பட்டால் என்ன மாதிரி?

ஜனாதிபதி ராஜபக்ஷ: அதற்காக பிரஜைகளை நீங்கள் தண்டிக்கப்போகிறீர்களா அல்லது அதற்கு பொறுப்பானவரை நீங்கள் தண்டிக்கப்போகிறீர்களா. என்னை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த மனித உரிமைகள் யாவற்றையும் நான் மீறினேன் என்று கூறுங்கள். மக்களை கொன்றதாக கூறுங்கள். சரியா? நீங்கள் என்னை தண்டிக்கிறீர்களா. மகிந்த ராஜபக்ஷ அல்லது இந்த நாட்டின் அப்பாவி மக்களையா தடைகள், பயண அறிவுறுத்தல்கள் மூலம் தண்டிப்பீர்கள்? நீங்கள் விரும்பினால் என்னைத் தண்டிப்பதற்கான வழிமுறைகள் உண்டு. அங்கு இப்போது கூறப்படுகிறது நான் தண்டிக்கப்படுவேன் என்று.

ரைம்: யுத்தத்தை நீங்கள் முடிவுக்கு கொண்டுவந்த விதமானது அபாயகரமான முன்னுதாரணம் என்று பல மக்கள் கருதுகின்றனர் மனித உரிமைகளின் அடிப்படையில் பொதுமக்கள் இழப்புகள் அடிப்படையில், இது மிகவும் உயர்ந்த மட்டத்தில் உள்ளது?

ஜனாதிபதி ராஜபக்ஷ: இவற்றை நான் முற்றாக நிராகரிக்கிறேன். மனித உரிமைகள் எவையும் மீறப்படவில்லை. பொதுமக்கள் இழப்புகள் எவையும் ஏற்படவில்லை. அவ்வாறு நான் செய்திருந்தால் இதனை முடிவுக்கு கொண்டுவர இரண்டரை வருடங்கள் சென்றிருக்காது. இதனை சில மணித்தியாலங்களில் நான் செய்திருப்பேன். இவை யாவும் பிரசாரங்கள்.

ரைம்: 7 ஆயிரம் பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக ஐ.நா. நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி ராஜபக்ஷ: 7 ஆயிரம்? எந்த வழியுமில்லை. கிழக்கு மாகாணத்தில் எந்த இழப்புகளும் ஏற்படவில்லை. வடக்கில் இழப்புகள் இல்லை என்று நான் கூறமாட்டேன். தப்பிச் செல்ல முயற்சித்த சிலரை புலிகள் சுட்டுள்ளனர்.

ரைம்: அறியப்படாதது அதிகளவிற்கு உள்ளது. உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு நீங்கள் விரும்புவீர்களா?

ஜனாதிபதி ராஜபக்ஷ: என்ன நடந்தது என்பதை நாம் கண்டுபிடிப்பது அவசியம். நீங்கள் எதனையோ ஆரம்பிக்க விரும்பினால் நான் கடந்து போனதை கிளற விரும்பவில்லை.

ரைம்: இலங்கைக்கு அது (உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு) தேவைப்படுவதாக பலர் கருதுகின்றனர். கடந்த காலத்தில் நடந்தது பற்றி பேசுவதற்கு அது தேவையென கருதுகின்றனர்.

ஜனாதிபதி ராஜபக்ஷ: அதற்கு ஒரு வழிமுறை உண்டு. அவர்கள் மீண்டும் தண்டிக்கப்படுவார்கள் என்று உணரப்படாத தன்மை இருப்பது அவசியம். பின்னர் வடக்கும் தெற்கும் மீண்டும் சண்டையிடும். அது மீண்டும் ஏற்படக்கூடாது. கடந்த காலத்தை கிளற நான் விரும்பவில்லை. இந்தக் காயத்தை மீண்டும் அவிழ்க்க நான் விரும்பவில்லை.

ரைம்: சில சமயங்களில் காயத்தை குணப்படுத்த அதனை வெளிப்படுத்துவது தேவைப்படுகிறது.

ஜனாதிபதி ராஜபக்ஷ: கிழக்கில் இருந்து மேற்கு இந்த விடயத்தில் வேறுபட்டதாகும்.

ரைம்: இப்பொழுது தங்களின் முன்னுரிமை விடயம் என்ன?

ஜனாதிபதி ராஜபக்ஷ: 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் முகாம்களில் உள்ளனர். முழுப் பகுதியுமே கண்ணிவெடியால் புதைக்கப்பட்டுள்ளது. முழு பகுதியிலும் கண்ணிவெடிகளை நாம் அகற்ற வேண்டும். அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும். நீர், மின்சாரம், வீதிகள் என்பவற்றை ஏற்படுத்தி அவர்களை மீள குடியமர்த்த வேண்டும்.

ரைம்: உங்களின் காலவரையறை என்ன?

ஜனாதிபதி ராஜபக்ஷ: எங்களிடம் 180 நாட்கள் நிகழ்ச்சித் திட்டம் உள்ளது. 180 நாட்களில் அநேகமான மக்களை குடியமர்த்த விரும்புகிறோம்.

ரைம்: அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் எதனை நிறைவேற்ற விரும்புகிறீர்கள்?

ஜனாதிபதி ராஜபக்ஷ: குறைந்தது 50 வீதம் விடுவிக்கப்பட வேண்டும். 60 வீதம் என நான் கூறுவேன்.

ரைம்: இது வாக்குறுதியா?

ஜனாதிபதி ராஜபக்ஷ: இது வாக்குறுதி அல்ல. இலக்காகும்.

ரைம்: யுத்தம் முடிவடைந்துவிட்டது என்ற ஆறுதல் உணர்வு இப்போது நாட்டில் காணப்படுகிறது. ஆயினும், அடுத்து என்ன நடைபெறப்போகிறது என்ற உணர்வு தமிழர்கள் மத்தியில் காணப்படுகிறது?

ஜனாதிபதி ராஜபக்ஷ: இடம்பெயர்ந்த மக்களைக் கேட்டால் அவர்கள் கூறுவார்கள் நாங்கள் எமது கிராமங்களுக்கு போகப் போகிறோம் என்று. நீங்கள் அரசியல்வாதிகளைக் கேட்டால் எங்களுக்கு அது விருப்பம், இது விருப்பம் என்று கூறுவார்கள். ஆனால், அரசியல் தீர்வொன்றை நாங்கள் வழங்க வேண்டிய தேவையுள்ளது.

ரைம்: தமிழர்களுக்கு சில விதமான சுயாட்சிக்கான ஏற்பாடு தேவை என நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ளீர்களா?

ஜனாதிபதி ராஜபக்ஷ: தமிழர்கள் என்று கூறாதீர்கள்? இந்த நாட்டில் இன அடிப்படையில் தனியான பகுதிகளில் கொடுக்க முடியாது. மாகாணங்களுக்கு அதிகாரங்கள் நிச்சயமாக இருக்கிறது. அங்கு உள்மட்ட விடயங்கள் அவர்களால் கையாளப்படும்.

ரைம்: நாட்டின் ஏனைய பகுதியில் இருந்தும் ஏதோவொரு விதத்தில் வேறுபட்டதான ஆட்சி முறைமையை வடக்கிலுள்ள மக்கள் விரும்பினால்?

ஜனாதிபதி ராஜபக்ஷ: அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். முழு நாடுமே ஒரு முறைமையை கொண்டிருக்க வேண்டும். கிழக்கிற்கு ஒன்றும் வடக்கிற்கு ஒன்றுமான முறைமையை கொண்டிருக்க முடியாது.

ரைம்: புதிய வீதிகள், புதிய பாலங்கள் என்று ஏற்கெனவே அபிவிருத்திக்கான அறிகுறிகள் உள்ளன ஆனால், உதாரணமாக, வீதிகள் தொடர்பாக சில கவலைகளை நான் கேள்வியுற்றுள்ளேன். தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளை ஒன்றுடன் ஒன்று இணைப்பதற்கு பதிலாக சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட தெற்கை இணைப்பதாகவும் தெற்கு மக்களுக்கு மிக சுலபமாக நடவடிக்கைகளை அங்கு மேற்கொள்ளும் வகையில் அங்கு செல்வதற்கு ஏற்புடைய வகையிலும் இவற்றை மேற்கொள்வதாக கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பகுதிகளின் குடித்தொகை பரம்பலை மாற்றுவதற்கான ஒருவிதமான முயற்சியா இது?

ஜனாதிபதி ராஜபக்ஷ: இல்லை. ஆனால், இது கொழும்பில் நடைபெறுகிறது. கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இங்கு வந்துள்ளனர். தமிழர்கள் வந்துள்ளனர். ஏன் நீங்கள் இங்கு வருகின்றீர்கள் என்று அவர்களை கேளுங்கள். அவர்களை நான் நிறுத்த முடியுமா. இல்லை. எவராவது நாட்டின் எந்தப் பகுதியிலும் வந்து வாழ முடியும். இது மனிதரின் உரிமையாகும்.

ரைம்: அம்பாந்தோட்டை துறைமுக திட்டமானது சீனாவின் புதிய பாரிய திட்டமாக உள்ளது.

ஜனாதிபதி ராஜபக்ஷ: இது இலங்கையின் திட்டமாகும். சீனா எமக்கு உதவுகிறது. இது வர்த்தகக் கடனாகும். அம்பாந்தோட்டை எனது பிரதேசம். பல வருடங்களாக இது புறக்கணிக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதியை அபிவிருத்தி செய்வது எனது கடமையும் கடப்பாடும் ஆகும். கொழும்பை மட்டுமல்ல, ஏனைய மாவட்டங்களையும் நாம் அபிவிருத்தி செய்வது அவசியமாகும்.

ரைம்: இந்த துறைமுகத்தில் சீனாவின் தந்திரோபாய ஆர்வம் இருக்கின்றதா என்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஜனாதிபதி ராஜபக்ஷ: நான் அதனைக் கேட்டேன். சீனா இந்த யோசனையை முன்வைத்திருக்கவில்லை. இந்த யோசனை சீனாவினுடையது அல்ல. அது எங்களுடையது. அவர்கள் எமக்கு பணத்தை தந்துள்ளனர். இந்தியா ஆம் என்று சொல்லியிருந்தால் நாம் துறைமுகத்தை வழங்கியிருப்போம். நான் மகிழ்ச்சியாக அதனை ஏற்றுக்கொண்டிருப்பேன். அமெரிக்கா பூரணமான விமான நிலையத்தை நிர்மாணித்துக் கொடுப்பதாக இருந்தால் ஆம். ஏன் இல்லை. துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இது தொடர்பாக எமக்கு வழங்க முன்வந்திருக்கவில்லை.

ரைம்: இந்தியாவிலும் பார்க்க சீனா இலங்கையின் மிகவும் முக்கியமான நேச அணியாக உருவாகி வருகிறதா?

ஜனாதிபதி ராஜபக்ஷ: நாம் அவ்வாறு பார்க்கவில்லை. நாம் அவ்வாறு சிந்திக்கவுமில்லை. இந்தியா எமது அயலவர், உறவினர், எமது நண்பர் நாம் விசேட உறவைக் கொண்டுள்ளோம். எங்களைப் போன்ற சிறிய நாடொன்றுக்கு அபிவிருத்திக்காக பணம் தேவை, உதவி தேவை இந்த உலகில் எமக்கு பணத்தை வழங்குவதற்கு எவரால் முடியும். நாம் சீனாவிடம் போக முடியும், ரஷ்யாவிடம் செல்ல முடியும் அல்லது பிரேசிலிடம் செல்லலாம். மிக குறைந்தளவு நாடுகளாலேயே கொடுப்பதற்கு முடியும். ஜப்பான் எமக்கு அதிகளவிற்கு உதவுகிறது. எமது அபிவிருத்தியின் மிகப்பெரிய பங்காளி ஜப்பான் ஆகும். இந்தியாவும் எமக்கு உதவுகிறது.ரைம்: கடந்த ஜனவரியில் நான் இலங்கைக்கு வந்திருந்தேன். படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்தவின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்க வந்திருந்தேன். அவருடைய பத்திரிகையில் வெளியான ஆசிரியர் தலையங்கம் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. அது உங்களுக்கு விலாசமிடப்பட்டு இருந்தது.
ஜனாதிபதி ராஜபக்ஷ: அவர் என்னுடைய நல்ல நண்பர். எனக்கு அறிவிக்குமாறு அவர் யாருக்கோ தெரிவித்திருந்தார். (அவர் ஆபத்தான நிலையில் இருந்தபோது) ஆனால், துரதிர்ஷ்டவசமாக எனக்கு அந்த செய்தி கிடைக்கவில்லை. அருகில் இருந்த பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு நான் அவரிடம் கோரியிருந்திருப்பேன். என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது.

ரைம்: இது அரசாங்கம் என்று அவர் மிகவும் நிச்சயமாக இருந்தார்?

ஜனாதிபதி ராஜபக்ஷ: இது அரசாங்கத்தின் விடயமாக இருந்திருந்தால் அவர் எனக்கு அழைப்பு விடுத்திருக்க மாட்டார்….. உண்மை தெரியவரும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இல்லாவிடில் குற்றச்சாட்டு என் மீது தான் வரும்.

 

 

 

Exit mobile version