குடியேற்றப்படும் சிங்கள மக்களுக்கான அரச அதிபர் பிரிவு உருவாக்கப்பட்டு வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமையப்போகும் உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்கான எல்லையை நிர்ணயம் செய்யும் பணியினை அனுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. புதிதாக அமையவிருக்கும் உதவி அரசாங்க அதிபர் பணிமனைக்கு வெளிஓயா பிரதேசம் மட்டும் போதாது. எனவே, மேற்கொண்டு சில தமிழ் கிராமங்களும் முல்லைத்தீவின் கரைதுறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு புதிய அலுவலகத்துடன் சேர்க்கப்படவிருப்பதாகத் தெரியவருகிறது. குறிப்பாக கொக்குளாய் கிழக்கு மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் கிழக்கு, மேற்கு, மத்தி, வடக்கு, நித்தியாகுளம், குமுளமுனை, முந்திரிகைகுளம், தண்ணீர்முறிப்புகுளம், கடற்கரை எல்லைப் பிரதேசம், தென்னைமரமாவடி, டொலர் பண்ணை, கென்பண்ணை போன்ற பல பூர்வீக கிராமங்கள் புதிதாக அமையவுள்ள சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைக்கப்படவுள்ளது. இது அப்பட்டமான தமிழரின் நில அபகரிப்பு நடவடிக்கையாகும்.
மக்களின் அவல நிலை குறித்தும், சிங்களக் குடியேற்றங்கள் இனச்சுத்திகரிப்பை அடிப்படையாக கொண்டது என்பது குறித்தும் இலங்கை தழுவிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் சூறையாடப்படும் மக்களின் அவலங்களை வெளிக்கொண்டுவரும் போர்க்குணம் மிக்க புதிய அரசியல் தலைமை அவசியமானது.