Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முல்லைத் தீவிலும் இலங்கை அரசின் நிலப்பறிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் விஸ்தரிக்கப்படுவதால் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுப் பறிபோவதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் ஆங்காங்கு உள்ள மினி காவலரண்கள் அகற்றப்பட்டு பெரியளவிலான இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.ஒட்டுசுட்டான் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அதனை அண்டிய காணிகள், கற்சிலைமடுவில் சிவன் ஆலய வளாகமும் அதனை அண்டிய மக்களின் காணிகளும், முத்துஐயன்கட்டு தட்டையர் மலைப்பகுதியில் தனியாரின் காணிகளும், புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் சங்க வளாகமும் அதனை அண்டிய காணிகளும், கேப்பாபுலவு மக்களின் இருப்பிடங்களும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுப் பெரிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதனால் மக்கள் தமது காணிகளை இழந்து வருகின்றனர். மேலும் காணிகள் சுவீகரிக்கப்படும் ஏதுநிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாரம்பரிய தமிழ் மக்களின் பூர்விக இடமான முல்லைத்தீவில் இவ்வாறு பெருமளவு காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படுகின்றமை இங்குள்ள மக்களிடையே பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளன.மேலும் பெரியளவில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றமை அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version