Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முல்லைத்தீவு நகரை நோக்கி நகரும் இராணுவத்தினர்;கடும் மோதல்.

14.12.2008.

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு நகரை நோக்கி நகர்ந்துள்ள இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையி்ல் கடும் சண்டைகள் நடைபெற்று வருவதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதல்கள் காரணமாக இந்தப் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற கடுமையான எறிகணை தாக்குதல்களினால் முள்ளியவளை வற்றாப்பளை போன்ற இடங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதிகளை நோக்கி மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு வைத்தியசாலை அமைந்துள்ள மாஞ்சோலை பகுதி்களிலும் எறிகணைகள் வீழ்ந்து வெடிப்பதனால் அங்கு வைத்தியசாலை செயற்பட முடியாத நிலையும் அரச திணைக்களங்களைச் சேர்ந்தவர்களின் வசிப்பிடங்களில் இருக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு நகரப்பகுதியில் தொடர்ந்தும் அரச செயலகங்கள் இயங்கி வருகின்ற போதிலும் அலுவலகங்களுக்கு அரச ஊழியர்களின் வருகை குறைந்திருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் கூறுகின்றார்.

இதேவேளை, மாங்குளத்திலிருந்து ஒட்டுசுட்டான், நெடுங்கேணி ,முள்ளியவளை ஊடாக முல்லைத்தீவுக்குச் செல்லும் சாலையில் போக்குவரத்து செய்ய வேண்டாம் என இராணுவம் அதிகாரிகளுக்கு ஞாயிற்றுகிழமை அறிவித்திருப்பதாகவும் முல்லைத்தீவு அரச அதிபர் தெரிவித்திருக்கின்றார்.

எனினும், வவுனியாவில் இருந்து ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக புளியங்குளம் – நெடுங்கேணி – ஒட்டுசுட்டான் வழியாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகருக்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்குமான உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனப்போக்குவரத்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
BBC.

Exit mobile version