24.01.2009
முல்லைத்தீவு கல்மடுக்குள அணையை இன்று காலை புலிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளமையினால், பரந்தன் பூநகரி பிரதான வீதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
முல்லைதீவை நோக்கி முன்னேரிக்கொண்டிருக்கும் படையினரின் நகர்வை தடுப்பதற்காக அதி சக்தி வாய்ந்த வெடிகுண்டை கொண்டு கல்மடுக்குள அணையை புலிகள் தகர்த்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா படையினரின் பல அணிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தத் தாக்குதல் குறித்த விபரங்கள் அரச விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து வெளியாகா விட்டாலும் கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் படைத்தரப்பினருக்கு பாரிய அனர்த்தம்; ஏற்பட்டு இருக்கலாம் எனவும் 600ற்கு மேற்பட்ட படையினர் காணாமல் போயிருக்கலாம் எனவும் ஐயம் வெளியிட்டுள்ளன. கூடவே பாரிய ஆயுத தளபாடங்களும் நீரில் சிக்குண்டதாக கூறப்படுகிறது. எனினும் அத்தகைய இழப்புக்கள் எதுவும் இல்லை என படைத்தரப்புக்கள் கூறுகின்ற போதும் கொழும்பில் அமைச்சர்கள் மட்டத்தில் பெரியளவில் பேசப்படும் சம்பவமாக முன்னுக்குப் பின் முரனான தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இதேவேளை இலங்கையின் பாதுகாப்பு இணையத்தளம் விடுதலைப் புலிகள் மிகவும் கீழ்தரமான ராணுவ உத்தியைக் கையாண்டு கல்மடுக் குளத்தை உடைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. அத்துடன் மக்களுக்கு இது பெரும் மனிதாபிமானப் பிரச்சினையை ஏற்படுத்தும் எனவும் கவலை வெளியிட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.