முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்களின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். இதையடுத்து அந்த 3 பேரும் தங்கள் தண்டனையைக் குறைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
கடந்த 20 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருவதால் தங்கள் தண்டனையைக் குறைக்குமாறு அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் அந்த 3 பேரையும் தூக்கில் போட இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில் காங்கிரஸைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் அந்த மூவரின் மனுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவர்களின் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற வேண்டும் என்றும், மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கூடாது என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் மூவரின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடிவு செய்தது.
இதையடுத்து அந்த மனு நீதிபதி சிங்வி தலைமையிலான பெஞ்ச் முன்பு வரும் 10ம் தேதி விசாரணைக்கு வருகிறது.