Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில் 3 பேரின் சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் மூவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தங்களது கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பரிசீலிப்பதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டது. எனவே, ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை பிப்ரவரி 4-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தீர்ப்பை ஒத்திவைத்தது.

கடந்த ஜனவரி 21-ம் தேதி மற்றொரு வழக்கில் ‘கருணை மனுவை பரிசீலிப்பதில் தேவையற்ற தாமதம் செய்ததால், பாதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை மேற்கோள்காட்டியே முருகன் உள்ளிட்ட மூவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால், மனுதாரர்களின் கோரிக்கையை கடுமையாக எதிர்த்த மத்திய அரசு, “இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசு அளவுக்கு அதிகமான தாமதம் எதையும் செய்யவில்லை. இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் இதுவரை தங்கள் செயலுக்காக சிறிதும் வருந்தவில்லை என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இவர்கள் மூவரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

Exit mobile version