Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முருகன் உள்ளிட்டோருக்கான தூக்குத்தண்டனை வழக்கு: விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு

முருகன் உள்ளிட்ட ராஜீவ் கொலைக் கைதிகள் வழக்கு தொடர்பான வழக்கை விசாரிக்க இந்திய உயர்நீதிமன்றம் இன்று மறுப்புத் தெரிவித்துள்ளது. பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை அங்கு விசாரிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று இந்திய உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதும், அதனை விசாரிக்க நியமிக்கப்பட்டிருந்த நீதிபதிகள் அமர்வு பிரஸ்தாப வழக்கை விசாரிக்க மறுத்து விட்டனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி தெரிவித்த ஆட்சேபனையை ஏற்றுக் கொண்டே நீதிபதிகள் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். அதில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை ரத்து செய்யக் கோரி ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை வந்தபோது உயர்நீதிமன்ற வளாகத்தில் பெரும் கூட்டம் கூடியது. இதனால் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. எனவே வழக்கு விசாரணையை சென்னையில் தொடர்நதால் அது தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். மேலும் தூக்குத் தண்டனை குறித்த ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே இந்த வழக்கையும் உச்சநீதிமன்றத்துக்கே மாற்றி விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்ந்த வழக்கறிஞர் வெங்கட் என்பவர் உச்சநீதிமன்றத்திடம் மனுவொன்றின் மூலம் கோரியிருந்தார். இதை ஏற்று நீதியரசர் சிங்க்வி தலைமையிலான இரண்டு நீதிபதிகள் கொண்ட குழு இந்த வழக்கை விசாரித்தது. பின்னர் விளக்கம் கேட்டு மூன்று பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு வந்தது. சிங்க்வி விடுமுறையில் இருப்பதால் மூன்று பேர் கொண்ட வேறு நீதிபதிகள் அமர்வொன்றின் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து பேரறிவாளன், முருகன், சாந்தன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வாதிட்டபோது, இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை முடிந்து விட்டது. நீதிபதி சிங்க்வி தற்போது விடுமுறையில் உள்ளார். அவர் வந்த பிறகுதான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி அமர்வு, இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது. தவறான பெஞ்ச் முன்பு இந்த வழக்கு இன்று வந்துள்ளது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த இதை மூன்று நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டனர். நீதிபதி சிங்க்வி வந்த பின்னர் அந்த பெஞ்சுக்கு இந்த வழக்கு மாற்றப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். பின்னர் ராம்ஜெத்மலானியுடன், இந்த வழக்குக்காக டெல்லிக்குப் போயிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், ராம்ஜெத்மலானி அவர்களின் வாதத் திறமையால் மூன்று பேரின் தூக்குக் கயிறும் அறுபடும். அதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. மூன்று பேரின் தூக்குத் தண்டனையும் முறியடிக்கப்படும் என்றார். இதற்கிடையே, இதுவரை எந்தத் தேர்தலிலும் வைகோ வாக்கு அளிக்காமல் இருந்தது இல்லை. ஆயினும் இன்று அவரது சொந்த கிராமத்தில், தனது தம்பிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டிய ஜனநாயகக் கடமை இருந்த போதிலும், அதற்கும் மேலாக மூன்று தமிழர் உயிரைக் காக்கும் முயற்சி அதைவிட முக்கியமானது எனக் கருதி வைகோ நேற்றைய தினம் டெல்லி புறப்பட்டுச் சென்றிருந்ததுடன், வழக்கு விசாரணையின்போது நேரில் பார்iவிட்டுள்ளதாக அவரது கட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version