எனது மடியிருத்தி
இரட்டைப்பின்னலிட்டு
இடுப்புப்பட்டியிருக்கி
கழுத்துப்பட்டி முடிந்து
புத்தகப்பை தோளில் மாட்டி
உனை முன்னே போகவிட்டு
பின்னே இருந்து
அழகு பார்க்கும்
தந்தை மனசு எனக்கு
அப்போதும் இப்போதும்.
தலைவாரிப்பொட்டிட்டு
பிஞ்சுப்பாதங்களுக்கு
கொலுசிட்டு
புத்தாடை உடுத்தி
பொம்மைகள் செய்யும்
உந்தன்
குழந்தைத்தனத்தையே
நான் அதிகம்
நேசித்திருக்கிறேன்.
இன்னமும்
விரும்புகின்றேன்.
இருந்தும் நீ
பூப்பெய்து விட்டாய்
உந்தன் சிறுபராயம்
தொலைந்து
சமூகக்கட்டுக்குள் போனதை
என்னால் இன்னமும்
ஜீரணிக்க முடியவில்லை.
மொத்தத்தில்
இதுவொரு முரண்பாடான
உலகம் தான்.
மூடத்தை சமூக ஒழுக்கம்
என்கிறது.
அன்று போல
இன்றும் ஆன உன்
அதே அச்சொட்டுச்சிரிப்பை
“இழிப்பு” என்கிறது.
கனிந்த பேச்சை
“சத்தம்” என்கிறது.
வளைவு, நெளிவு, சுழிவு,
ஆகமொத்தத்தில்
உந்தன் நளினத்தை
“ஆட்டம்” என்கிறது.
அன்று நீ
பொம்மை செய்ததும்
இன்று நீ
பொம்மை ஆனதும்
உண்மையே.
வெறும் பதின்ம வயது
எந்தன் செல்லமே!
***
இலங்கை முல்லைத்தீவிலிருந்து…
தாயக கவிஞர்
அ.ஈழம் சேகுவேரா
கருத்துகள் மற்றும் பகிர்வுகளுக்கு: