Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மும்பை தாதாக்களுடன் கும்மாளமடித்த போலீஸ் அதிகாரிகள்

மும்பை: மும்பையின் பிரபல நிழலுலக தாதா சோட்டா ராஜனின் கூட்டாளிகளுடன் போலீஸ் அதிகாரிகள் புத்தாண்டு பார்ட்டியில் குடித்து கும்மாளம் அடித்தது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட துணை கமிஷனர், உதவி கமிஷனர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு கிரிமினல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியான மும்பையின் பிரபல நிழலுலக தாதா சோட்டா ராஜன். மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த இவன் சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசாரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு மும்பையை விட்டு தப்பியோடினான். தற்போது தெற்காசிய பகுதியில் ரகசியமாக இருந்து வருவதாக தெரிகிறது.

இவனுடைய கூட்டாளிகள் இன்னமும் மும்பையில் மறைமுக ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். கூட்டாளிகளின் ஒருவனான டி.கே.ராவ் மற்றும் சிலர் கடந்த அக்டோபர் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.

13 ஆண்டு சிறை வாழ்க்கைக்குப் பின்னர் வெளியே வந்ததைக் கொண்டாடும் விதமாக கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று மும்பையில் ரகசியமாக ஒரு கோலாகல விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விருந்து காட்சிகளில் சில மீடியாவின் கைகளுக்கும் கிடைத்தன. அதில் மும்பையின் டெபுடி போலீஸ் கமிஷனர் ஒருவர் உட்பட 4 போலீஸ் அதிகாரிகள் தாதாக்களுடன் விருந்தில் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தது தெரிய வந்தது.

கிரிமினல் குற்றவாளிகளுடன் போலீஸ் அதிகாரிகள் குடித்துக் கும்மாளம் போடும் அந்த காட்சிகள போலீசார் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோட்டா ராஜனின் கூட்டாளிகள் ஏற்பாடு செய்திருந்ததாகக் கூறப்படும் அந்த விருந்தில் சோட்டா ராஜனின் மனைவி சுஜாதா சிறப்பு விருந்தாளியாக கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

சோட்டா ராஜன் கூட்டத்தில் முக்கிய தாதாக்களான ஃபரித் தான்ஷா, சுனில் போடார் உள்ளிட்டோர் சுஜாதாவை சகல மரியாதையுடன் சிம்மாசனத்தில் ஆமரவைத்து பணிவிடை செய்யும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், தாதாக்களுடன் கும்மாளமடித்த ஸ்பெஷல் பிரான்ச் துணை கமிஷனர் வி.என்.சால்வே, உதவி கமிஷனர் பிராகாஷ் வாணி, சப் இன்ஸ்பெக்டர் கோலாட்கர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆர்.எஸ்.கோகலே ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மும்பை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version