27.11.2008.
கடைசியாக கிடைத்த விபரம்
பிணைக் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த தாஜ் ஹோட்டலில் தற்போது சண்டை முடிவுக்கு வந்துள்ளதாக மஹாராஷ்டிர மாநில காவல்துறைத் தலைவர் கூறியுள்ளார்.
தாக்குதல் விபரங்கள்
பயங்கரவாதத் தடுப்பு சிறப்புப் போலீஸ் படைத் தலைவர் உள்பட 14 போலீசார் இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
தற்போது, மும்பையின் முக்கிய ஹோட்டல்களான தாஜ் மஹால் பேலஸ் மற்றும் ஒபிராய் ஆகியவற்றில் தங்கியிருப்பவர்களை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்துள்ளனர். இஸ்ரேல் உள்பட பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் அதில் அடங்குவர் என்று தெரிகிறது.
அந்த இரண்டு ஹோட்டல்களிலும் பயங்கரவாதத் தடுப்பு சிறப்புப் போலீஸ் படையினர் நுழைந்து, அங்கு இருப்பவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில், போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
தாஜ் ஹோட்டலின் 19-வது தளத்தில், நான்கு அல்லது ஐந்து பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், 40 முதல் 50 பேர் வரை உள்ளே சிக்கிக் கொண்டிருப்பதாகவும் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர்களில் இரண்டு எம்.பி.க்களும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த ஹோட்டலில் இருந்து இதுவரை 6 பேரது சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகள் ஏழு பேர் காயமடைந்திருப்பதாக இந்தியாவுக்கான பிரிட்டிஷ் ஹைகமிஷனர் ரிச்சர்டு ஸ்டேக் தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்பட பிரிட்டிஷ் அரசு உறுதிபூண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒபிராய் ஹோட்டலிலும் பலர் சிக்கக் கொண்டிருக்கிறார்கள். அங்கும் சிறப்புப் போலீஸ் கமாண்டோ படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். ஹோட்டலுக்குள் இருந்து அடிக்கடி துப்பாக்கிச் சூடு சத்தமும், குண்டுவெடிப்பு சத்ததமும் கேட்டுக் கொண்டிருக்கின்றன.
வியாழன் காலை முதல் பல பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நாரிமன் ஹவுஸ் பகுதியில் இஸ்ரேலிய குடும்பம் தங்கியுள்ள கட்டடத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து அவர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. அந்தக் கட்டடத்தை போலீஸ் படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
இதுவரை, ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாடீல் தெரிவித்துள்ளார். மேலும் 6 பயங்கரவாதிகள் இரண்டு ஹோட்டல்களில் பதுங்கியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
தாஜ் ஹோட்டல் அருகே இரண்டு குண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
‘டெக்கான் முஜாஹிதீன்’ என்ற புதிய அமைப்பு இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது.
புதன்கிழமை இரவு சுமார் 9.30 மணிக்கு முதல் தாக்குதல் தொடங்கியது. முக்கிய ரயில் நிலையம், மருத்துமனை உள்பட பல இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன.
இந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன், அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா உள்பட பல்வேறு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச விமானங்கள் ரத்து
மும்பையில் இருந்து உலகின் வேறு பகுதிகளுக்கு செல்லும் பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் உள்ளூர் விமான சேவைகள் பல இயங்குகின்றன.
நகரில் பதற்றம்
மும்பையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை சுமார் 16 மணி நேரங்களாக தொடர்ந்து நடந்துவரும் நிலையில், நகரின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஊரடங்கு உத்திரவு அமலில் உள்ளது. பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், பங்கு சந்தை உள்ளிட்டவை வியாழனன்று மூடப்பட்டுள்ளன. நகரின் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. மக்கள் தத்தமது வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பங்கேற்கும் ஒருநாள் போட்டிகள் ஒத்திவைப்பு
தற்போது இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ள அடுத்த இரு ஒரு நாள் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் டெஸ்ட் போட்டிகளின் நிலை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
BBC.