வடக்கில் முன்னை நாள் போராளிகள் அச்சம் காரணமாகவும் வேறு பல சமூக ஒடுக்குமுறைகள் காரணமாகவும் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் அவலம் பல்வேறு தரப்பினராலும் கூறப்பட்டது.
ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது குற்றச் செயல் போன்றும் செல்வம் அடைக்கலநாதன் இப்போது திருந்தியுள்ளதாகவும் கூறும் விக்னேஸ்வரன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் குற்றவாளிகளாகக் கருதுமாறு சமூகத்திடம் விண்ணப்பிக்கிறார்.
போராளிகளைக் குற்றவாளிகளாக்கும் இந்த நபரது செயல் காரணமாக அவர்கள் மீதான சமூக ஒடுக்கு முறைகளையும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகிறது. அவர்கள் மேலும் அவல நிலைக்க்குத் தள்ளப்படும் நிலை தோற்றுவிக்கப்படுகின்றது.
ஆயுதப் போராட்டங்களை மக்கள் விரும்புவதில்லை. அரசுகள் ஆயுதங்களால் மக்களைக் கொன்று போடும் போது அதற்கு எதிரான தற்காப்பு யுத்தத்தை மக்கள் முன்னெடுக்கின்றனர். அதுவே ஆயுதப் போராட்டத்திற்கான அடிப்படை நியாயமாகின்றது.
இவ்வாறான போராட்டங்களைத் தடுத்து மக்களை அழிப்பதற்கான அதிகார வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலின் தமிழ் முகவராகச் செயற்படும் விக்னேஸ்வரன் மக்களுக்காகப் போராடிய முன்னை நாள் போராளிகளையும் குறிவைத்து அன்னியப்படுத்தி அழிக்க முற்படுவது அருவருப்பான அரசியல்.