இந்திய ஊடகங்கள் அன்னா ஹசரேயே பிரதமார வந்துவிட்டது போன்று புழகாங்கிதமடைந்தன. ‘பிரபாகரன் உயிர்வாழ்கிறார்’ என மக்களுக்குக் கூறிவந்த தமிழ் ஊடகங்கள் மைத்திரியின் மனைவி தமிழர் என வதந்திகளைப் பரப்பின.
ஒரு நாட்டின் ஆட்சித் தலைவர் எளிமையாக உடையணிவதும், சிக்கனமாகச் செலவு செய்வதும் சிறப்புத் தகமைகள் அல்ல. அவை வழமையான நடைமுறைகளே. ஒபாம எளிமையாகவும் சிக்கனமாகவும் வாழ்கின்றார் என்று ஊடகங்கள் கூச்சலிட்ட அதேவேளை ஆப்கானிஸ்தானில் கொத்துகொத்தாக மக்கள் கொல்லப்பட்டனர். உலகம் முழுவதும் இரத்த ஆறு ஓடியது.
இதன் ஒரு படி மேலே சென்ற இந்திய ஊடக்ங்கள் சீனாவின் தலையீட்டால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்ட விரிசலைச் சீர் செய்வதற்காக மைத்திரிபால இந்தியா வந்துள்ளார் என்றன. இந்திய அதிகாரவர்க்கத்திற்கும் இலங்கை அதிகாரவர்க்கத்திற்கும் இடையே எப்போதும் விரிசல் ஏற்பட்டதில்லை.
ராஜபக்ச உட்பட ஊழல் செய்தவர்களைத் தண்டிப்போம் என ஆட்சிக்கு வந்த மைத்திரி தலைமையிலான அரசு இன்று கோத்தாபய ராஜபக்ச போன்றவர்களைக் கூட சுதந்திரமாக நடமாட விட்டிருக்கிறது.
கோத்தாபயவின் தலைமையில் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்ட ரக்ண ஆகாஷ லங்கா, அவன்கார்ட் மரிரைம் என்ற இரண்டு நிறுவனங்களும் ஆதராங்களோடும் ஆயுதங்களோடும் அகப்பட்ட போதும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இலங்கையின் கிழக்கிலும் வடக்கிலுமிருந்து இரணுவம் அகற்றப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகண முதலமைச்சரின் குறைந்தபட்சத் தீர்மானத்தைக்கூட மைத்திரி அரசு எதிர்ப்பதாகக் கூறியது.
மைத்திரிபால சிரிசேனவின் வீட்டுச் சுவர்களை மாவோ சே துங், லெனின், கார்ல் மார்க்சின் படங்கள் அலங்கரிக்கின்றன. ஆரம்பத்தில் தோழர். சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்ட மைத்திரிபால சிரிசேன அண்மைக்காலம் வரை தான் மாவோவின் வழியிலேயே வாழ்வதாக அறிவித்தார். மாவோவின் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய போது சீனாவில் அனைத்துத் தேசிய இனங்களுக்கும் பிரிந்து செல்லும் உரிமை வழங்கப்பட்டது.
காலனியத்திற்குப் பிந்திய காலம் முழுவதும் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகள் குறித்துக்கூடப் பேசத் தயங்கும் சிரிசேன ஏகாதிபத்தியத் தத்துவங்களுகு தனது சிந்தனையை மாற்றி மூன்று தசாப்தங்கள் கடந்து போய்விட்டன.
மாவோயிஸ்டுக்களைத் வேட்டையாடி தனது சொந்த மண்ணிலேயே பழங்குடி மக்களை அழித்துச் சிதைக்கும் போது இந்தியக் கொள்ளையர்களை இலங்கையில் முதலிமாறு அழைப்பார் என மைத்திரியின் நிகழ்ச்சி நிரல் கூறுகின்றது.