Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முன்னாள் தமிழ் ஆயுதக் குழுக்களை அமைதிப் பேச்சுகளில் இணைத்துக்கொள்ள 58 வீதமான சிங்களவர் எதிர்ப்பு

14 – July – 2008
 
மாற்றுக் கொள்கைகளுக்கான ஆய்வுமையக் கருத்துக்கணிப்பில் தெரிவிப்பு போரின் மூலம் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தலாம் என்று முப்பது வீதமான சிங்கள மக்களே நம்புகின்றனர் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வு மையம் நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.லண்டன் லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் எரித்திரிய கற்கை நெறிகளுக்கான துறையினர் “சமாதான வாக்கெடுப்பு’ என்ற தலைப்பின் கீழ் இலங்கையில் இயங்கும் மாற்றுக்கொள்கைகளுக்கான மையத்துடன் இணைந்து மேற்கொண்ட கருத்துக்கணிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு விபரத்தின் சில பகுதிகள் வருமாறு;

தற்போது நடைபெறும் போர் பாரதூரமான பிரச்சினை என்று 37 வீதமான சிங்கள மக்களே தெரிவித்துள்ளனர். அதேபோன்று கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் பரவலடைந்துள்ள வன்முறைகள் மிகப்பெரிய பிரச்சினை என்று 31 வீதமான சிங்கள மக்களே கூறியுள்ளனர்.

போரின் மூலம் விடுதலைப் புலிகளைப் பலவீனமாக்கிவிட முடியாது என 30 சதவீதமான மக்கள் தெரிவித்துள்ள வேளையில் 16 வீதமான சிங்கள மக்கள் வடக்கு, கிழக்குக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதன் மூலம் நாடு பிளவுபடும் என்று கூறியுள்ளனர். அத்துடன், 45 வீதமான சிங்கள மக்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

சமாதானப் பேச்சுக்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்;

38 வீதமான சிங்கள மக்கள் அமைதிப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்னர். தெரிவுசெய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகளுடனான அமைதிப் பேச்சுகளுக்கு 52 வீதமான சிங்கள மக்களும் முன்னாள் தமிழ் ஆயுதக்குழுக்களை அமைதிப் பேச்சுக்களில் இணைத்துக்கொள்வதற்கு 58 வீதமான சிங்கள மக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

அரச படைகளின் சுற்றிவளைப்புகள் மற்றும் கைதுகளை பொறுத்துக்கொள்ளலாம் என்றும் இந்த மாதிரியான சூழ்நிலையில் அவற்றை ஏற்றுக்கொள்ளலாம் என்றும் ஐந்து வீதமான சிங்கள மக்களே தெரிவித்துள்ளனர். இலங்கையில் அரச மொழியாக தமிழும் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்று 34 வீதமான மக்களே தெரிவித்துள்ளனர். முஸ்லிம் மக்களுக்கு கிழக்கில் தன்னாட்சி உரிமை வழங்கப்படவேண்டும் என்ற கருத்துக்கு 84 வீதமான சிங்கள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் சமஷ்டி முறையை எற்படுத்த 77 வீதமான சிங்கள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் எழுந்தமானமாக தெரிவுசெய்யப்பட்ட 1,700 பேரை மாதிரி மக்கள் தொகையினராகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு 99 வீதம் மிகச் சரியாகவும் மூன்று அல்லது நான்கு வீதம் கூடவோ குறையவோ வழு உடையதாகவும் அமையலாம் என்றும் ஆய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Exit mobile version