Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மூத்த பத்திரிகையாளர் தோழர் மாஜினி மறைவு

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சிறந்த எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான தோழர் மாஜினி (ரா.ரங்கசாமி) தனது 90வது வயதில் ஞாயிறன்று இரவு காலமானார்.

தனது கடைசி மூச்சு வரை கம்யூனிச லட்சியங்களுக்காகவும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும் எழுத்தின் மூலம் அர்ப்பணித்துக் கொண்ட தோழர் மாஜினியின் மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இரங்கல் தெரிவித்துள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

தோழர் மாஜினி சுதந்திரத்திற்கு முன் தினந்தந்தி பத்திரிகையில் துணை ஆசிரியராக தனது பத்திரிகை வாழ்க்கையை துவங்கினார். அதன்பின் புரட்சி என்ற இதழை சொந்தமாக தொடங்கினார். அதன்பின் ஜனசக்தி ஆசிரியர் குழுவில் தொடர்ந்து பல ஆண்டுகள் பணியாற்றினார். சோவியத் நாடு இதழில் 30 ஆண் டுகளுக்கு மேல் பணியாற்றினார்.

மகாராஷ்டிரா அரசு வெளியிட்ட அம்பேத்கர் நூல்கள் மொழியாக்கத்தில் கடுமை யாக உழைத்து நூல்கள் வெளிவர உதவினார்.

தோழர் மாஜினி மறைவால் அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி:

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்திலும், பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் பணியாற்றியவரும், மூத்த பத்திரிகையாளர், சிறந்த எழுத்தாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளர் எனப் புகழ்பெற்றவருமான தோழர் மாஜினி (ரா.ரங்கசாமி) மார்ச் 28 அன்று காலமானார்.

அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அஞ்சலி செலுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

 மறைந்த மாஜினிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநில துணை செயலாளர் சி. மகேந்திரன், என்சிபிஎச் நிறுவன பொது மேலாளர் துரைராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் டி.எஸ். ரவீந்திரதாஸ், ஏ.ஜே. சகாயராஸ், பெருமாள் உள்ளிட்ட பலரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

தோழர் மாஜினியின் உடல் குமரன் இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. பின்னர், தமிழ் நாடு பத்திரிகையாளர் சங்க தலைமை அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது.

Exit mobile version