விமான விபத்தில் பலியான ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உடல் நேற்று காலை கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அவரது சொந்த ஊரான கடப்பாவில் இன்னும் சிறிது நேரத்தில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. ஆனால் ராஜசேகரரெட்டியின் மரணச் செய்தியைக் கேட்ட ஆந்திர அப்பாவி பொது மக்கள் பலரும் மாரடபைப்பால் மரணம் அடைந்ததாகவும். பெரும்பாலான மக்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆந்திரா முழுவதும் சுமார் எண்பதுக்கும் மேற்பட்டோர் கடந்த இரு நாட்களில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஊர்ஜிதமகாத தகவல்கள் தெரிவித்துள்ள போதிலும் உயிரிழப்புகள் அதிகம் என்பதை நிச்சயமாக உறுதியாகக் கூற முடியும். கல்வியறிவற்ற மக்களின் உணர்ச்சிகர அரசியல் வழியேதான் காலம் காலமாக அரசியல் வாதிகள் தங்களின் பதவி அதிகாரத்தை நிறுவி வந்திருக்கிறார்கள். அடிப்படை வசதிகளோ, உரிமைகளோ மறுக்கப்பட்ட பெரும்பலான ஆந்திர மக்கள் காலம் காலமாக இவ்வாறு வழிபாட்டு மனோபாவத்திலேயே கடத்தி வரப்பட்டிருக்கிறார்கள். அரசியல் வாதிகளை தெய்வங்களாகவும், மீட்பர்களாகவும் நினைக்கும் அப்பாவி மக்களின் உயிர் பலி என்னும் உணர்ச்சிகர அரசியலின் வழியே அடுத்து ஆட்சிக்கு வரப்போவது விபத்தில் மறைந்துள்ள ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.