உலக நாணய நிதியம்(IMF) பயன்படுத்தும் கணிப்பீட்டு முறையில் நாட்டில் சராசரி மக்களின் கொள்வனவுத் திறன் உப காரணியாகப் பயன்படுத்தப்படுகிறது.
அதன் முழுமையான அர்த்தம் இதுதான்:
சீனாவில் ஒரு கிலோ அரிசியின் விலை அமெரிக்காவில் அதன் விலையிலும் குறைவானது. இது நாட்டுக்கு நாடு வேறுபடும். ஆக, இதனைக் கருத்தில் கொள்ளாமல் ஒரு நாட்டின் பொருளாதார நிலைமையக் கணிப்பிட முடியாது என்கிறது ஐ.எம்.எப். சீனாவில் உழைப்பவர் ஒருவரின் ஊதியம் அமெரிக்க டோலர்களில் மாற்றப்படும் போது பல மடங்கு குறைவானதே. ஆக, சீனாவின் கொள்வனவுத் திறனை டோலர்களில் மதிப்பிட முடியாது என்று ஐ.எம்.எப் கருதுகிறது. இதன் காரணமாக சீனப் பணப் பெறுமானத்தோடு ஒப்பிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமானது என்று கணிப்பிடப்படுகிறது.
சீனாவின் கொள்வனவுத் திறன் குறைந்த ஊதியம், மூல வளங்கள் ஆகியவற்றால் நிர்ணையிக்கப்படும் பொருளின் மதிப்பை அடிப்படையாகக்கொண்டது என்று ஐ.எம்.எப் கூறுகின்றது.
இந்த அளவுகோலை அடிப்படையாக முன்வைத்தே விற்பனைப் பண்டங்களின் உலக மயமாதல் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு குறித்த பண்டத்தின் மதிப்பு என்பதை அதன் உற்பத்திச் செலவு மற்றும் இலாபம் என்பவற்றிற்கு அப்பால் அவற்றின் வியாபாரக் குறிகளை(Brand) அடிப்படையாகக்கொண்டு மதிப்பிடப்படுகிறது. சீனாவில் அத்தியாவசியப் பொருட்களின் உலகமயமாதல் அரசின் கட்டுபாட்டினுள் இருப்பதனால் ஜீ.டி.பி இன் பெறுமதி அதிகரித்துள்ளது என்பது பொதுவாகப் ஊடகங்களில் வெளிப்படுத்தப்படாத ஒரு சிலரின் வாதம்.
இங்கு ஜி.டி.பி என்பது மக்களின் வாழ்க்கையோடு தொடர்பற்ற நாடுகளிடையேயான மூலதனப் பரிமாற்றத்திற்குரிய ஒரு சுட்டி. ஐ,எம்.எப் என் கணிப்பீட்டின் அடிப்படையில் சீனா என்ற கொடுமையான முதலாளித்துவப் பொருளாதாரம் கோலோச்சும் நாட்டில் மக்களின் வாழ்க்கை நாளாந்தம் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் பொருளாதார நெருட்டியும், உள் நாட்டு உற்பதியின் சரிவும், சீனாவை உலகின் சக்திதிமிக்க பொருளாதார மையமாக மாற்றியுள்ளது என்ற உண்மையும் இதன் உள்ளே உறங்கிக்கிடக்கின்றது.