Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முடிவுக்கு வந்தது இரத்தம் சிந்தும் அரசியலே; இரத்தம் சிந்தாத அரசியல் தளத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய பணிகள் எவை?:காலகண்டன்.

 

 

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதென்றும் பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ளதென்றும் புலிகள் இயக்கத்தின் தலைமை ஒழிக்கப்பட்டுள்ளதென்றும் ஜனாதிபதியும் அரசாங்கமும் பிரகடனம் செய்து ஒரு மாதம் கடந்து விட்டது. அதனையொட்டிய வெற்றிவிழாக்களும் விருது வழங்கல்களும் கோலாகலமாக நடைபெற்றன. தொடர்ந்து பட்டங்கள் வழங்கும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இவையாவும் இந்நாட்டின் பெரும்பான்மை இனமான சிங்கள மக்கள் மத்தியில் வெற்றிப்பெருமிதக் களிப்பூட்டும் நிகழ்வுகளாகவே இடம்பெற்றன. இவற்றையெல்லாம் சிங்கள ஆங்கில ஏடுகள் குறிப்பாக அரசாங்க சார்பு ஏடுகள் மிகுந்த முக்கியத்துவத்துடன் செய்திகளையும் ஆய்வுக்கட்டுரைகளையும் வழங்கி வந்தன.அது அவர்களின் அறநெறிக்கு உட்பட்டதேயாகும். ஏனெனில் மன்னர்கள் காலத்தின் புலவர்கள் அரசனையும் ஆட்சியையும் போற்றிப் புகழ்ந்து பொன்னும் பொருளும் பெற்று வாழ்ந்தனர் என்பது வரலாறு கூறும் செய்தியாகும். இதன் தொடர்ச்சிதான் இன்றும் இடம்பெறுகிறது. அதனால், தான் முடிவுற்ற யுத்தத்தையும் பெற்றெடுத்த வெற்றியையும் என்றோ இரண்டு மன்னர்களுக்கிடையில் இடம்பெற்றதாகப் பதிவுபெற்ற துட்டகைமுனுஎல்லாளன் யுத்தம்வெற்றி என்பனவற்றுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டும் பேசப்பட்டும் வந்ததையும் காண முடிந்தது. இவற்றால் பெரும்பான்மையான சிங்கள மக்கள் எத்தகைய சிந்தனைகளுக்கும் பழைமைவாதப் போலிப் பெருமைகளுக்கும் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள் என்பது கவனத்திற்குரியதாகும்.

உண்மையிலேயே இத்தகைய பரப்புரைகள் இன,மத,மொழி,பண்பாடு சார்ந்து முன்னெடுக்கப்படுவது இலங்கையில் இது தான் முதற்தடவையல்ல. கடந்த 62 வருடகால பாராளுமன்ற ஆட்சி அதிகாரத்தின் மையமாகவும் அதுவே இருந்து வந்திருக்கிறது. இதிலிருந்து எவ்வகையிலும் மாற்றமில்லாத வகையிலேயே தமிழ் மக்கள் மத்தியில் எதிர்நிலை அரசியல் பதவிகளுக்கான கொள்கைகளும் நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு வந்துள்ளமை நமது கவனத்திலிருந்து விடுபடமுடியாதவையாகும். ஆனால், இவற்றின் மொத்த விளைவுகளும் அண்மைய யுத்த இறுதி விளைவுகளும் எவ்வளவிற்கு இந்நாட்டிற்கும் மக்களுக்கும் பயன்தருவதாக இருந்து வந்தது என்பதே எழுப்பப்பட வேண்டிய வினாவாகும்.

இன்று யுத்தத்தின் வெற்றி பற்றியும் போராட்டத்தின் தோல்வி பற்றியும் இரு புறத்திலேயும் களிப்பும் கவலையும் காணப்படுகிறது.இதிலே ஆழ்ந்து கவனிக்கப்படவேண்டியதும் முழு அக்கறையும் செலுத்தப்படவேண்டிய ஒன்றுதான் இந்த வெற்றி தோல்விக்கு கொடுக்கப்பட்ட விலைகளின் பெறுமதியாகும். உயிர்கள் உடைமைகள் உறவுகள் அவயவங்கள் உழைப்புகள் போன்ற யாவும் இழக்கப்பட்டுள்ளன. வன்னிப்போரிலே கடந்த மூன்று வருடயுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை உறுதியானதாக எவருக்கும் தெரியாது.இறுதி நாட்களிலான யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் தெரியாது. வெளிநாட்டுப் பத்திரிகைகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் வெளியிடும் தகவல்கள் தமது தேவைநோக்கங்களுக்காக எண்ணிக்கையினை கூட்டியும் மிகைப்படுத்தியும்

கணக்கிட்டு வந்தன. அதனை மறுத்த அரசாங்கம் தனது மிகக் குறைந்த எண்ணிக்கையைக் கூறி வந்தது. எவ்வாறாயினும் அண்மையயுத்த உச்சநிலையில் மடிந்து போன மக்களின் உண்மையான தொகை கண்டறிய நீண்ட காலம் செல்லலாம். அல்லது அறியப் படாது போகலாம். ஆனால் கடந்த முப்பது வருடகால யுத்தம்போராட்டத்தினால் வடக்கு கிழகில் குத்துமதிப்பாகப் பார்க்கும் போது இரண்டு இலட்சம் வரையான மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்க முடியும் என்றே நம்பப்படுகிறது.

கொடிய யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக மீண்டும் மீண்டும் அரசாங்கம் உரத்துக் கூறி வருகிறது. அரசாங்க இராணுவத்திற்கும் விடுதலையின் பெயரால் ஆயுதம் தூக்கிப் போராடிவந்த புலிகள் இயக்கத்திற்குமிடையிலான ஆயுதநடவடிக்கைகளும் மோதல்களுமே முடிவுக்கு வந்துள்ளன. ஆனால் அவற்றுக்கு அடிப்படையான காரணியாக அமைந்த தேசிய இனப்பிரச்சினைக்கு முடிவோ முற்றுப் புள்ளியோ ஏற்பட வில்லை. இன முரண்பாட்டை கொடிய யுத்தமாக வளர வைத்த சூழலை இல்லாமல் செய்ய முடிய வில்லை. இவ்விடத்திலே ஒரு விடயத்தை நாம் உன்னிப்பாகக் காணவேண்டும். “யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம்’ என்பது உணரப்பட வேண்டும்.

 

எனவே, யுத்தமானது இரத்தம் சிந்தும் அரசியலை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. ஆனால் அதே யுத்தம் இரத்தம் சிந்தாத அரசியல் தளத்தில் இருந்து வரவே செய்கிறது. அவ்வாறான அரசியல் தளத்திலான யுத்தத்திற்கு மகிந்த சிந்தனை அரசாங்கம் எத்தகைய தீர்வை முன்வைக்கப் போகின்றது என்பதே இன்றுள்ள பிரதான கேள்வியாகும்.

கொழும்பில் குவிக்கப்பட்டுள்ள அதிகார மையத்திலிருந்து வடக்கு நோக்கிப் பார்க்கும் போது வடமாகாணத்தின் ஆரம்பம் வவுனியா அதன் அடுத்த அந்தலை யாழ்ப்பாணம். இவ்விரு இடங்களிலும் நகர சபை மாநகர சபைத் தேர்தல்கள் மிகுந்த அவசரத்துடன் நடத்தப்படுகிறது. அரசாங்கத்தின் இந்த அவசரமானது அரசியல் தீர்வில் காட்டப்படவில்லை. முன்பு ஜனாதிபதியால் கூறப்பட்ட ஒரு கூற்றை ஞாபகப்படுத்த முடியும். “பயங்கரவாதத்திற்கு யுத்தத்தின் வழியாகத் தீர்வும் இனப் பிரச்சினைக்கு அரசியல் வழியான தீர்வும்’ என்பதே அதுவாகும். ஆனால் யுத்தத் தீர்வு கண்டுகொண்டதையொட்டிய ஆரவாரங்கள் தொடர்கிறதே தவிர அரசியல் தீர்வு பற்றிய பேச்சு மூச்சு ஜனாதிபதியின் வாயிலிருந்து வருவதாக இல்லை. அதேவேளை, அவரது அமைச்சர்களும் பங்காளிகளும் அது இது என்று கூறி வருகிறார்கள். இவ்வாறு அரசியல் தீர்வு முன்வைக்கும் தயக்கம் காட்டிவரும் சூழலில் தான் வடக்கே தேர்தல் நடத்தப்படுகிறது. அரசியல் தீர்வு முன்வைக்கப்படாமை மட்டுமன்றி வடக்கில் ஜனநாயகம் சுதந்திரம் இயல்பு வாழ்வு என்பன இல்லாத சூழலே நிலவுகிறது. இந் நிலையில் அங்கு தேர்தல் மட்டும் நடத்துவதால் ஜனநாயகம் இயல்பு வாழ்வு மீண்டுவிடப் போவதில்லை. மேலும் நடைபெறப்போகும் தேர்தல்கள் கூட எவ்வாறு இடம்பெறப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.

யுத்தம் முடிவுற்றதாக பிரகடனம் செய்யப்பட்ட கையோடு அறிவிக்கப்பட்டு இப்போது நடத்தப்படவுள்ள தேர்தல்கள் என்பது வடக்கில் ஏற்பட்ட மனிதப் பேரவலத்திற்கு ஒத்தடம் கொடுக்கும் முயற்சி என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், அது ஒரு திசை திருப்பல் முயற்சியாகும். அத்துடன், ஒற்றையாட்சியின் கீழ் வடக்கு, கிழக்குப்போல் இணைத்துவிட்டதாகக் காட்டுவதாகும். வடக்கு , கிழக்கில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென்பதில் இரண்டு கருத்துகளுக்கு இடமிருக்க முடியாது. அதேபோன்று வடக்கை தெற்குடன் ஐக்கியப்படுத்தி வைத்திருக்கவும் வேண்டும் என்பதும் தேவையான ஒன்றேயாகும்.

ஆனால், அவை வெறும் செயற்கையானதாகவும் வலிந்த அதிகாரத் திணிப்பாகவும் மேலாதிக்க உள் நோக்கங்களின் அடிப்படையிலும் அமையக்கூடாது என்பதே மிக முக்கியமானதாகும். இலங்கை என்பது பல்லினங்களும் பல மதங்களும் வாழும் நாடாகும். இந்நாட்டில் பல்லின அரசியல் பொருளாதார பண்பாட்டு அடிப்படைகள் பேணப்படல் வேண்டும். அதற்கு பன்மைத்துவ ஜனநாயகம் நடைமுறையில் இருக்க வேண்டும். ஜனாதிபதியின் மே 19 ஆம் திகதிய பாராளுமன்ற உரையின் போது இந்நாட்டில் சிறுபான்மை இனம் எதுவும் இல்லை என்று எடுத்துரைத்தார். அக்கூற்றில் தெளிவான வரையறை காணப்படவில்லை என்பதே ஆய்வாளர்களின் கண்ணோட்டமாகும்.

இந்நாட்டில் பெரும்பான்மை என்றோ சிறுபான்மை என்றோ பார்க்கக்கூடாது என்று கூறி இருப்பின் அதில் தெளிவான அர்த்தம் இருந்திருக்க முடியும். ஆனால், சிறுபான்மை இனம் என்று எதுவும் இல்லை என்பது உள்நோக்க அர்த்தமாகவும் கொள்ள முடியும்.

 

யுத்தம் முடிவுக்கு வந்த சூழலிலும் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாலும் நொந்து நொடிந்து அல்லற்பட்டு அழுது கொண்டிருக்கும் வடக்கின் மக்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் வழங்கப்பட வேண்டும். ஒரு மாதம் மட்டும் கடந்த நிலையில் அதற்கு அவகாசம் போதாது என்று காரணம் கூறப்படலாம். இருப்பினும் அவற்றுக்கான அறிகுறிகள் தெளிவாகத் தென்படாமையே தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியாகவும் எதிர்காலம் பற்றிய அச்சங்களாகவும் இருந்து வருகின்றன. இதனை இன்று வடக்கு அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் மூன்று இலட்சம் மக்களின் அவலமான அன்றாட வாழ்வில் இருந்து காணமுடிகிறது. உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு மக்கள் கையேந்தி நிற்கும் நிலை கண்டு நெஞ்சம் பதை பதைக்கின்றது. சொந்த நாட்டில், சொந்த பிரதேசத்தில், சொந்த உழைப்பில் ஈடுபட்டு சுதந்திரமாக வாழ்ந்த மக்கள் இன்று வெறுவிலிகளாக்கப்பட்ட பேரவலத்தை வர்ணிக்க முடியவில்லை. வரலாற்றில் என்றுமே சந்தித்திராத குழப்பங்களுக்கும் சோகங்களைச் சுமந்த துயர வாழ்வுக்கும் உள்ளாகி தமிழ் மக்கள் இருந்து வருகின்றனர். “போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்’ என்று முழங்கி முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன்பு யுத்தத்தின் வளர்ச்சிக்கு நாள் கோள் வைத்து திசைகாட்டிச் சென்ற பேரினவாதப் புண்ணியவாளன் ஜே.ஆர். இன்றிருந்திருந்தால் தமிழர் பேரவலம் கண்டு பூரண திருப்தி கொண்டிருப்பார்.

எனவே, இன்று வடக்கின் மக்களுக்குத் தேவைப்படுவதும் முன்னுரிமை பெற வேண்டியதும் தேர்தல்கள் அல்ல. வண்டிக்கு முன்புறமாகப் பூட்ட வேண்டிய இடத்தில் குதிரையைப் பூட்டினால் தான் பயணத்தை உரியவாறு பயணிக்க முடியும். அதனை விடுத்து வண்டியின் பின்னால் குதிரையைக் கட்டிவைத்துக் கொண்டால் பயணிக்க முடியாது என்பது உணரப்பட வேண்டும். வெறும் கண்துடைப்புகளும் சில மேலெழுந்தவாரியான நடவடிக்கைகளும் எடுக்கப்படுவது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு தீர்வாகாது.

முப்பது வருட யுத்தம் வெற்றிகரமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது என்ற வெற்றி முழக்கங்கள் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைத் தந்துவிட மாட்டாது என்பது ஆளும் தரப்பில் உணரப்படுவது அவசியம். அத்தகைய ஒரு உணருதலின் வழியாக நியாயமான அரசியல் தீர்வு முன்வைக்கப்படல் வேண்டும். அதற்கான முன்மொழிகளை முன்வைத்து பன்முகப்பட்ட ஜனநாயகக் கலந்துரையாடல்கள், பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்வுகள் எட்டப்பட வேண்டும். இதற்கான முழுப் பொறுப்பும் கடமையும் ஜனாதிபதியிடமும் அவரது தலைமையிலான அரசாங்கத்திடமுமே உள்ளது. அவர் தனக்குரிய வரலாறுக் கடமையினை செவ்வனே முன்னெடுத்தால் அவருக்குரிய இடத்தை இலங்கை வரலாறு போற்றுதலுக்குரியதாக வழங்கும். இல்லாதுவிடின் கடந்த காலத்தின் பழிகளுக்கு உள்ளாகிய தலைவர்கள் போன்று பதவிக் காலத்தை கழிப்பதுடன் தேசிய இனப்பிரச்சினையின் தீர்வின்மை தொடர்வதற்கும் காரணமானவர்களில் ஒருவராகிக் கொள்வார்.

எனவே, தூரநோக்குடனும் தனக்குரிய ஆளுமை நிலைப்பாடுடனும் தேசிய இனப்பிரச்சினைக்கு துணிவான தீர்வினை முன்வைத்து ஐக்கியமும் சுபிட்சமும் கொண்ட இலங்கையை உருவாக்கும் இன்றைய சந்தர்ப்பத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதனை தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர். நீதி நியாயத்தையும் மனிதநேயத்தையும் வற்புறுத்தும் சிங்கள மக்களும் கூட நியாயமான அரசியல் தீர்வின் அவசியத்தை வற்புறுத்தியே நிற்கின்றனர்.

தேசிய இனப்பிரச்சினையின் தீர்வு அடிப்படையானதும் அவசியமானதும் என்பது வற்புறுத்தப்பட வேண்டிய அதேவேளை இன்று வடக்கில் அதி முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது முட்கம்பி வேலிகளின் மத்தியில் முடக்கி வைக்கப்பட்டுள்ள சுமார் மூன்று இலட்சம் மக்களின் விடுவிப்பும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர அனுமதிப்பதுமாகும். அவ்வாறு அனுமதிக்கப்படும் மக்களுக்குரிய புனர்வாழ்வு உதவிகளும் புனரமைப்புச் செயற்பாடுகளும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படல் வேண்டும். அதற்கான முழுப் பொறுப்பினையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளல் வேண்டும். அப்பொழுது தான் மக்கள் தமது இயல்பு வாழ்வை மீளக் கட்டியெழுப்ப இயலும்.

எனவே, வடக்கில் கடந்த முப்பது வருடங்களாக யுத்தம், போராட்டம் என்பனவற்றால் வாழ்விழந்து வாடி வதங்கி வெறுமையான வாழ்வுக்கு உள்ளாகி நிற்கும் மக்களுக்கு தேவைப்படுவது தேர்தல்கள் அல்ல. மேற்கூறிய விடயங்களேயாகும். அவற்றையே தமிழ் மக்களின் மீது உண்மையான அக்கறையும் அனுதாபங்களும் கொண்ட அரசியல் சமூக சக்திகள் வற்புறுத்த வேண்டும்.

மூலம்: தினக்குரல்.

Exit mobile version