மட்டக்களப்பு செங்கலடி முகாமில் ரீ.எம்.வீ.பி உறுப்பினர்கள் நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான ஊடகங்கள் கருணா குழுவின் பிரதான முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர் என்கின்றன.
முகாம் தாக்கி நிர்மூலமாக்கப்பட்டுள்ளதுடன் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ரி-56-2 ரக துப்பாக்கி – 05, ரி-56 ரக துப்பாக்கி – 03 மற்றும் பெருமளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள சார் ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.
கிழக்கிலிருந்து வரும் செய்திகள், கருணா பிள்ளையான் உள்முரண்பாடுதான் தாக்குதலுக்குக் காரணமென்றும், பிள்ளையான் குழுவிரே கருணா குழுவிற்கெதிராக இத் தாக்குதலை நடாத்தியிருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்டவர்களின் சடலங்களில் 1 வீட்டு வாசலிலும், ஒன்று வீட்டிற்கு உள்ளேயும், 2 சடலங்கள் வளவினுள்ளும் காணப்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து செங்கலடிப் பகுதியில் சிறு பதட்டம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.