Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முகாம்களில் வெள்ளம் ஏற்பட்டதற்கு ஐ.நா.வை குற்றம் சாட்டுகிறது அரசு!!!

 கடும் மழையாலும் வெள்ளத்தாலும் வவுனியா முகாம்களிலுள்ள சுமார் 3 இலட்சம் மக்கள் சொல்லொணாத் துன்பத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த நிலைமைக்கு ஐ.நா. முகவரமைப்புகளே காரணம் என்று அரசாங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளது.

இருநாட்களாகப் பெய்த அடைமழையால் முகாம்களிலுள்ள மக்கள் தங்கியிருக்கும் இடம் குடிநீர் மற்றும் சமைத்து உண்ண முடியாமல் பட்டினியிருக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மோசமான நோய்கள் பரவும் ஆபத்து தோன்றியிருப்பதாகவும் உதவிப் பணியாளர்கள் எச்சரித்துள்ள நிலையில், முகாம் பகுதிகளில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வடிகால் முறைகளை அமைத்ததற்கான பொறுப்பை ஐ.நா. முகவரமைப்புகளே ஏற்றுக்கொள்ள வேண்டுமென அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

தற்காலிக கூடாரங்கள் கடும் மழைக்கு ஈடுகொடுக்க முடியாததால் மக்கள் தங்கியிருக்க பெரும் நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர். வெள்ளத்தால் மலசலகூடங்கள் நிரம்பி வழிந்து மோசமான நிலைமையை ஏற்படுத்தியிருப்பதுடன் தொற்றுநோய்கள் பரவுவதற்கான நிலைமையையும் தோற்றுவித்திருக்கிறது.

முகாம்களிலுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் போதாது என்று சர்வதேச உதவி அமைப்புகள் மீண்டும் மீண்டும் கூறிவரும் நிலையில், அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள பருவ மழையும் பெரும் பீதியை இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

500 க்கும் மேற்பட்ட மக்களை மேட்டு நிலப்பகுதிக்கு இடம்மாற்றியுள்ளோம். அவர்களுக்கு சமைத்த உணவையும் ஏனைய அத்தியாவசிய உதவிகளையும் அரசாங்கம் வழங்கியுள்ளது என்று வவுனியா அரச அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் எ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

மெனிக்பாம் முகாம் பகுதியில் வடிகால் முறைமை அரைவாசியே நிர்மாணிக்கப்பட்டிருப்பதால் அந்த முகாமின் ஒரு பகுதி மோசமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஒரு இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக ஆங்கிலப் பத்திரிகையொன்று நேற்று தெரிவித்திருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூறப்பட்டிருப்பதாக சார்ள்ஸ் நிராகரித்திருக்கிறார். நிவாரணப் பணிகளுக்கு உதவும் முகாம்களை விட்டு மக்கள் வெளியேறுவதைத் தடுப்பதற்காகவும் வவுனியாப் பகுதிக்கு மேலதிகப் படையினர் நகர்த்தப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களில் வடிகால் முறைமையை அமைப்பதில் ஐ.நா. முகவரமைப்புகளே சம்பந்தப்பட்டிருந்ததாகவும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் அந்த அமைப்புகளே பொறுப்பேற்று இருந்ததாகவும் ஆதலால் வடிகால் முறைமையிலுள்ள மோசமான நிலைக்கு அரசை குற்றம் சாட்டமுடியாது என்றும் மீள் குடியேற்ற அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றின் இணையத்தள சேவைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளார்.

வலயம் 4 ஐச் சேர்ந்த சுமார் 400 பேரே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ எம்.பி.யின் ஆலோசனையின் பிரகாரம் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவ உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரிசாத் பதியுதீன் கூறியுள்ளார். தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் சுகாதாரவசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் குறித்து அறிக்கையை தயாரித்து வருவதாக அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version