Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“முகாம்களில் வாழ்க்கை, வரிசையில் காத்திருந்து போராடுவதிலேயே ஆரம்பமாகிறது”…

வட இலங்கையின் வவுனியாவுக்கு அருகேயுள்ள செட்டிகுளத்தில் அடர்ந்த காடாக இருந்த நிலப்பகுதியில் வரிசையாக வெள்ளை, நீலநிறப் புள்ளிகள் இடப்பட்டிருந்த கூடாரங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உள்ளனர்.இந்த முகாம்களில் உள்ள மக்களின் அன்றாட வாழ்வு தண்ணீருக்காக வரிசையில் காத்திருந்து போராடுவதிலேயே ஆரம்பமாகிறது. நோய்களை ஏற்படுத்தும் மோசமான சுகாதார நிலைமையும் மருந்துக்காக காத்திருப்பதும் அங்கு காணப்படுகிறது.

முகாம்களிலுள்ள சிறுவர்களுக்கு பாடசாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டாலும் அங்கு வசதிகள் இல்லாமலும் ஆசிரியர்கள் இல்லாமலும் கல்வித்துறை பாதிக்கப்பட்டுள்ளது என்று “ரைம்ஸ் ஒவ் இன்டியா’ பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இது தொடர்பாக அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

மூன்று வேளை உணவு வழங்க சமையலறைகள் உள்ளன. ஆனால், உணவு விநியோகம் மற்றும் பங்கீட்டுப் பொருட்களை அங்குள்ள 2 1/2 இலட்சம் மக்களுக்கு வழங்குவது பெரும் சவாலாக உள்ளது.

முட்கம்பி வேலிகளால் முகாங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், முன்கூட்டியே அனுமதி பெறாமல் எவராவது வராதவாறு ஆயுதம் தரித்தவர்கள் உறுதிப்படுத்துகின்றனர். இந்த நாட்களில் அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள், தன்னார்வ பணியாளர்களுக்கு மட்டுமே அங்கு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி பல்வேறு வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சுமார் 600 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்டதாக இது உள்ளது.

இடைக்கால நிவாரணக் கிராமங்கள் அல்லது வலயங்களில் இந்த அகதிகள் வெவ்வேறாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இக்கிராமங்களுக்கு கதிர்காமர், ஆனந்தகுமாரசாமி, இராமநாதன், அருணாசலம் உட்பட தமிழ் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வலயங்களும் பிரிவுகளாகவும் வகுக்கப்பட்டுள்ளன. மீள்குடியேற்றத்திற்கான ஜனாதிபதி செயலணிப்பிரிவு அதிகாரிகள் மற்றும் பல கிராம சேவை அதிகாரிகளால் இவை நிர்வாகம் செய்யப்படுகின்றன.

இறுதியாக வலயம் காணப்படுகிறது. இதற்கு இன்னமும் பெயரிடப்படவில்லை. இங்கு புலி உறுப்பினர்களுடன் இருந்த அகதிகள் உள்ளனர். அவர்களுடைய துன்பங்கள் மோசமாக உள்ளன. இருப்பிற்கான அவர்களின் போராட்டம் தொடர்வதை இந்த முகாம் நிச்சயமாக்கியுள்ளது.

செட்டிகுளம் முகாமானது இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள உலகின் மிகப் பெரிய முகாமென ஐ.நா.வால் வர்ணிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள நிலைமை அதிர்ச்சியளிப்பவை என அண்மையில் ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்திருந்தார்.

அத்துடன், அங்கு நிவாரணங்களை வழங்க அனுமதியளிக்கப்பட்டிருந்த அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனும் இதனைத் தெரிவித்திருந்தனர்.

இங்கு வரிசையே வாழ்க்கையாக உள்ளது. மருந்தகத்தின் முன்னால் பல மணித்தியாலங்கள் மருந்தெடுக்க காத்து நின்றோர் மயக்கமடைந்து விழுகின்றனர். நீர்க்குழாய், மலசலகூடங்களிலும் இந்நிலைமையே காணப்படுகிறது.

வந்தனா சந்திரசேகர் ( 28 வயது) என்ற பெண் 9 மாத கர்ப்பிணி. இவருக்கு ஏற்கனவே 5 பிள்ளைகள் உள்ளனர். இவர் தண்ணீருக்காக மூன்று நாட்களாக வரிசையில் காத்திருக்கிறார். நீண்டதூரம் காத்திருந்த பின்னர் ஒவ்வொரு குடும்பமும் தலா 10 லீற்றர் தண்ணீரைக் குடிக்க, குளிக்க, உடுப்புக் கழுவப் பெற்றுக் கொள்கின்றனர். சிறிய தாங்கிகளில் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு அது போதாமல் உள்ளது.

 

 
 
Exit mobile version