Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உயிரழிவுகளைத் தடுத்து நிறுத்த ஒரே வழி;சொந்த இடங்களுக்குச் சென்று வாழ அனுமதிப்பது தான்:புதிய ஜனநாயக கட்சி

புதிய ஜனநாயக கட்சி
ஊடகங்களுக்கான அறிக்கை        09.08.2009

 வவுனியா அகதி முகாம்களில் மழை வெள்ளத்தால் ஏற்படும் உயிரழிவுகளைத் தடுத்து நிறுத்த ஒரே வழி அகதிகளாக்கப்பட்ட சுமார் மூன்று லட்சம் தமிழ் மக்களை அவர்களது சொந்த இடங்களுக்குச் சென்று வாழ அனுமதிப்பது தான். வன்னியில் வாழ்ந்து வந்த ஒரே காரணத்திற்காக தண்டனைக் கைதிகள் போன்று முகாங்களில் தடுத்து வைத்து அவலங்களை எதிர் கொள்ள வைப்பது பௌத்த தர்மம் மேற் கொள்ளப்படுவதாகக் கூறும் நாட்டில் மனித தர்மத்திற்கு மதிப்பளிக்காத ஒரு நடவடிக்கையாகும். ஆதலால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும் வரப்போகும் பருவ மழையால் பாதிக்கப்படப் போகும் மக்களையும் தாமதமின்றி மீளக் குடியமர்த்துவதற்கு ஏற்ற நடவடிக்கையைத் தங்களது நேரடித் தலையீட்டின் மூலம் ஜனாதிபதி செயற்படுத்த வேண்டும் என எமது புதிய ஜனநாயக கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு வவுனியா அகதி முகாம்களில் மழை வெள்ளத்திற்குள் சிக்கியுள்ள மக்களின் துயர நிலைபற்றி புதிய ஜனநாயக கட்சி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல், தேசிய அமைப்பாளர் இ.தம்பையா ஆகியோர் கட்சியின் சார்பில் கையெழுத்திட்டு மேற்படி கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும் அக் கடிதத்தில் யுத்தத்தையும் பயங்கரவாதத்தையும் முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாகப் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி பிரகடனம் செய்து மூன்று மாதங்கள் முடிவுறுகின்றது. அகதிகளாக்கப் பட்ட மக்களை மீளக் குடியேற்றுவதற்கு 180 நாள் வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தால் கூறப்பட்டது. இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் அவலங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இவற்றுடன் இப்போது கடும் மழையும் பெருவெள்ளமும் ஏற்பட்டு மக்கள் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். குழந்தைகள் கர்ப்பிணித்தாய்மார்கள், பெண்கள், நோயாளர்கள், முதியவர்கள் மற்றையோர் இவ் வெள்ளத்தால் அவதியுறுகின்றனர்.
மழையும் வெள்ளமும் ஏற்கனவே தண்டனைக் கைதிகள் போன்று நடாத்தப்பட்டுவருபவர்களுக்கு மேலதிகத் தண்டனையாகவே இருந்து வருகிறது. ஏற்கனவே உயிரழிவுகளையும் இழப்புகளையும் தாண்டி வந்த மக்கள் ஏற்கனவே படுகாயங்களாலும் கடும் நோய்களாலும் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தனர்.
இப்போது மழை வெள்ளத்தால் அடுத்த கட்ட உயிர் அழிவுகளை எதிர் நோக்க வேண்டிய  அபாயத்திற்கும் உள்ளாகி உள்ளனர். தற்போதைய மழையினால் மட்டுமன்றி விரைவில் ஆரம்பிக்கவுள்ள பருவ மழையாலும் அகதி முகாம் மக்கள் பாதிக்கப்படப் போகிறார்கள். ஆதலால் மக்களைப் பாதுகாப்பதற்குள்ள ஓரே வழி அவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு சென்று வாழ அனுமதிப்பது தான். சொந்த நாட்டு மக்களான தமிழ் மக்களின் ஒரு பகுதியினர் வன்னியை வாழ்விடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஒரே காரணத்திற்காகத் தடுத்து வைத்து அவலங்களை அனுபவிக்க வைப்பது எத்தகைய தர்மத்திற்கும் நீதிநியாயங்களுக்கும் உட்பட்டதாக இருக்க முடியாது . எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறு முகாம்களை உருவாக்குவது நிவாரணங்கள் வழங்குவது மட்டும் போதாது. ஐ.நா. முகவர் நிறுவனங்களையோ ஏனைய உதவி வழங்கும் முகவர் அமைப்புகளையோ குறை கூறிப் பயன் இல்லை. சொந்த நாட்டு மக்களுக்கு பொறுப்பாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியது அரசாங்கமும் அதன் தலைவராகவும் இருக்கும் ஜனாதிபதியுமேயாகும் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றோம் என்றும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சி.கா. செந்திவேல்.
பொதுச் செயலாளர்.

Exit mobile version