இலங்கையின் வடபகுதியில் உள்ள தமிழ் மக்கள் முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த முகாம்களுக்கு ஐ.நா. நிதியுதவி வழங்குகின்றமை சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு ஏற்புடையதாக இருக்கின்றதா என்று ஐ.நா.விலுள்ள பிரிட்டிஷ் தூதுவர் ஜோன் சாவஸிடம் “இன்னர் சிற்றி பிரஸ்’ கேள்வியெழுப்பியிருக்கிறது.
ஐ.நா. செயலாளர் நாயகத்தின் இலங்கைக்கான விஜயத்தின் போது உடன் சென்றிருந்த “இன்னர் சிற்றி பிரஸ்’ அங்கிருந்து திரும்பியவுடன் இந்த கேள்வியை பிரிட்டிஷ் தூதுவரிடம் கேட்டதாக அதன் நிருபர் மத்யூ ரசல் லீ தெரிவித்திருக்கிறார்.
இந்த கேள்விக்கு சாவஸ் பதிலளிக்கவில்லை. ஆனால், ஐ.நா.வின் விவகாரம் தொடர்பாக உயர்மட்ட கவனம் செலுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த விஜயத்தின் போது பான் கீ மூன் தூதுவர் விஜய நம்பியார், மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைவர் ஜோன் ஹோம்ஸ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதுவரை பாதுகாப்பு சபைக்கு இலங்கை விஜயம் தொடர்பான எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை. அந்த அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் அதன் பின்னர் நடவடிக்கைகள் குறித்து பரிசீலணை செய்ய வேண்டியிருக்கும் என்று சாவஸ் கூறியுள்ளார்.
பான் கீ மூன் நியூயோர்க்கில் தற்சமயம் இல்லை. தொலைபேசி மூலமான கேள்விகளுக்கு ஜோன் ஹோம்ஸ் பதிலளித்தார்.
முகாம்களில் பார்த்த மக்கள் மோதல் வலயத்தின் இறுதிக் கட்டத்தில் இருந்தவர்களாக இல்லையே என்று “இன்னர் சிற்றி பிரஸ்’ கேள்வியெழுப்பியது. எனக்கு அதுபற்றி தெரியாது என்று ஜோன் ஹோம்ஸ் பதிலளித்தார்.
முழு வன்னிப் பகுதியோ அல்லது காடோ புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறிய அவர் அவை யாவும் மோதல் வலயம் என கணிக்கப்பட்டது என்ற வாதத்தை முன்வைத்தார்.
முகாம்களில் கடுமையான கண்காணிப்பின் மத்தியிலே பேட்டிகள் இடம்பெற்றன. புதிதாக வெற்றிடமான பகுதிகளில் சிங்கள பெரும்பான்மை உறுப்பினர்களை நகர்த்தாவிடின் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சகலரையும் சோதனையிடுவது என்பதே தற்போதைய இலக்கா? அவர்கள் தமிழ் பிரிவினைவாதத்திற்கு அல்லது சுயாட்சிக்கு ஆதரவளித்தார்களா? என்பது பற்றி சோதனை செய்வதே இந்த இலக்கா? இனச் சுத்திகரிப்பு இல்லாவிடின் இந்த கொள்கைக்கு ஐ.நா. உதவி வழங்க வேண்டும் என்று “இன்னர் சிற்றி பிரஸ்’ குறிப்பிட்டிருக்கிறது.
“”இந்த நடவடிக்கைகளுக்கு ஐ.நா. நிதி வழங்குவது தொடர்பான கேள்விக்கே இடமில்லை. முகாம்களுக்கு அவசர நிவாரணத்தை மட்டுமே ஐ.நா. வழங்கிவருகின்றது’ என்று ஹோம்ஸ் தெரிவித்தார்.
இயற்கை அனர்த்தம் ஏற்படாதபோது முகாம்கள் பயன்படுத்தப்பட்டால் இன, கொள்கை ரீதியான சோதனைகள் இடம்பெறுகின்றன. உணவு, பணம் வழங்கப்படுகின்றன. இவற்றில் ஐ.நா. நேரடியாக பங்களிப்பை வழங்குகிறது.
ஜனாதிபதி ராஜபக்ஷவுடனான பான் கீ மூனின் சந்திப்பின் போது பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான அச்சுறுத்தல், கைது, காணாமல் போதல் மற்றும் நிவாரணப் பணியாளர்கள் மீதான விடயங்கள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டதா? என்று ஹோம்ஸிடம் “இன்னர் சிற்றி பிரஸ்’ கேட்டது. இல்லை என்று ஹோம்ஸ் பதிலளித்தார்.
அரசாங்கம் முன்வைத்துள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் தமது சகல வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களையும் வழங்க வேண்டும் என்று அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்களிடம் கேட்கப்பட்டிருக்கிறது.
ஆனால், உலகில் எங்கும் அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் அவ்வாறு செய்வதில்லை. இந்த பிரச்சினை குறித்து பான் கீ மூன் கேள்வியெழுப்பவில்லை என்பதை ஜோன் ஹோம்ஸ் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
இதேவேளை, கொழும்பு விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் பகுதிக்குள் பான் கீ மூனுடனான சந்திப்பை மேற்கொள்ள முடியாமல் தமிழ் எம்.பி.க்கள் தடுக்கப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து ஐ.நா.வின் அரசியல் விவகாரத்திற்கு பொறுப்பான லிம் பாஸ்கோவிடம் “இன்னர் சிற்றி பிரஸ்’ கேள்வியெழுப்பியது.
இந்த செய்திகள் குறித்து தான் விசாரணை நடத்துவதாகவும், அவை தொடர்பாக பான் கீ மூனின் பிரதி பேச்சாளர் மேரி ஒகாபேயிடம் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்