Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டோர் விபரங்கள் ? : மனோ கணேசன்

வவுனியா முகாம்களிலுள்ள மக்கள் குறித்த முழுமையான விபரங்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டுமென சிவில் கண்காணிப்புக் குழுவின் அமைப்பாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களது பெயர், நிரந்தர முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஏனைய தனிப்பட்ட விபரங்கள் வெளியிடப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 150,000 பேரது தகவல்கள் பதியப்பட்டுள்ளது. இவர்களில் 111,000 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தினால் பதிவு செய்யப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை வழங்கவேண்டும் என மனோ கணேசன் கோரியுள்ளார்.
 
 
  தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து சுமார் 290,000 பொதுமக்கள் விடுக்கப்பட்டதாகவும், இதில் 150,000 மக்கள் தொடர்பான பதிவு நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதெனவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைப் பிரதிநிதி ரவிந்த ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்தோர் தொடர்பான தகவல்கள் அடங்கிய இணைய தளமொன்றை ஆரம்பிப்பதன் மூலம் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் உறவினர்கள் நன்மை அடைவார்கள் எனவும் இடம்பெயர் மக்கள் தொடர்பான சரியான தகவல்களை வழங்குவது மிகவும் அவசியமானதெனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்கள் சட்டத்திற்கு புறம்பான வகையில் காணப்படுவதாக தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version