Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முகாம்களிலுள்ள மக்கள்விலங்குகளை விட தாழ்ந்த நிலையில்;தமிழ் மக்களுக்கு உண்மையான தீர்வை முன்வையுங்கள்.

 

இனவாதிகள், அடிப்படைவாதிகளுக்கு இடமளிக்காமல் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிலையானதும் உண்மையானதுமான அரசியல் தீர்வை வழங்குமாறும் அதேவேளை, அரசாங்கத்திடம் இருக்கும் இது தொடர்பான திட்டம் என்ன என்பதை வெளிப்படுத்துமாறும் மூன்று அரசியல் கட்சிகள் கூட்டாக நேற்று செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளன.

“சமாதானத்தை வென்றெடுக்கும் அரசியல் தீர்வை பெற்றுத்தரும்’ என்ற கருப்பொருளில் இராஜகிரியவிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவு அலுவலகத்தில் நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, ஜனநாயக மக்கள் முன்னணி, புதிய ஹெலஉறுமய ஆகிய கட்சிகள் கூட்டாகச் செய்தியாளர் மாநாட்டை நடத்தின. இக்கட்சிகளின் தேச அணியும் பிரதான எதிர்க்கட்சியுமான ஐ.தே.க. இதில் பங்கேற்கவில்லை.

இந்த செய்தியாளர் மாநாட்டில் சு.க. மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;

“யுத்தம் முடிவுற்று இரண்டு மாதங்களாகின்ற போதும் நிரந்தர சமாதானத்தை வெற்றி கொள்வதற்கான எந்தவொரு வேலைத் திட்டமும் அரசிடம் இல்லை. தற்போது பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், சமாதானம் வெற்றி கொள்ளப்பட்டு அது முழு நாட்டுக்கும் வியாபிப்பது அவசியமாகும்.

நாட்டில் நிரந்தர சமாதானத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில் தமிழ் மக்களின் பிரச்சினைக்குச் சாதகமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பது அவசியமாகும். இதன் பின்னரே நாட்டிலுள்ள ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வை எட்டமுடியும்.

அதாவது வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பொருட்களின் விலையுயர்வு என்பன உட்பட பொருளாதார பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இதற்கு நிரந்தர சமாதான வேலைத் திட்டம் அவசியம். ஆனால், எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை.

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டதற்கு மறுதினம் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது;

பெரும்பான்மை, சிறுபான்மையென்று எதுவுமில்லை. நாட்டில் தேசப்பற்றாளர், தேசத்துரோகிகள் என்ற பிரிவினரே உள்ளனர். அத்துடன், அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமென்று கூறியுள்ளார். ஆனால், அது தொடர்பாக எந்தவொரு செயற்றிட்டமும் இல்லாது அது வார்த்தையாகியுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினை பல தசாப்தகாலமாக இழுபட்டு வருகின்றது. இந்த நிலையில், நிலையானதும் உண்மையானதுமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இந்நிலைமையில் ஜனாதிபதி தான் முன் வைக்கவுள்ள தீர்வுத் திட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

13 ஆவது திருத்தத்தையா அல்லது அதற்கு மேலாகவா அவர் செல்லப் போகின்றார் என்பது குறித்து வார்த்தையில் அல்ல செயலில் காட்ட வேண்டும். பயங்கரவாதம் அழிக்கப்பட்ட சூழ்நிலையில், ஜனாதிபதியின் தீர்வு என்னவென நான் கேட்கின்றேன். இதற்கு இதுவரை பதிலளிக்கப்படவில்லை.

நாட்டின் தலைவரென்ற வகையில் தீர்வு தொடர்பில் அவர் அதனை வெளிப்படுத்த வேண்டும். ஆனால், அவர் தீர்வு முன்வைப்பது தொடர்பில் மனதில் உள்ளதாகக் கூறுகின்றார். தீர்வை முன்வைப்பதற்கு நாளையே தயாரெனக் கூறும் அவர்;

அடுத்த தேர்தல் வரை காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். முதலில் அவர் தீர்வை முன்வைப்பதன் மூலம் மக்களின் கருத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க 1994 முதல் அதிகாரப் பரவலாக்கல் அவசியமென கூறியிருந்தார். அதன் பிரகாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயற்பட்டுள்ளது.

மகிந்த சிந்தனையில் மக்கள் ஏற்கும் தீர்வை முன்வைக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்வினை அரசு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பைப் பெறமுடியும். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அவர்கள் உரிமையுடன் வாழக்கூடிய தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.

இந்நிலையில், அரசாங்கம் இனவாதிகளுக்கும் அடிப்படைவாதிகளுக்கும் நாட்டின் ஒற்றுமை, ஐக்கியம் போன்ற வார்த்தை ஜாலங்களுக்கும் அடிபணியாமல் சமாதானத்தை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். இதன் மூலம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நிலையில், தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும்.

இதேவேளை, இடம்பெயர்ந்துள்ள மூன்று இலட்சம் மக்கள் விலங்குகளை விட கீழ் நிலையிலுள்ளனர். அவர்கள் நலன்புரி நிலையங்களில் அல்ல சிறைகளிலேயே உள்ளனர். இவர்கள் சாதாரண வாழ்க்கை வாழ இடமளிக்கப்பட வேண்டும்.

இலங்கை முகாம்கள் உலகிலேயே சிறந்ததென அரசு கூறுகின்றது. ஆனால், ஜனாதிபதியின் ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார எதிரான கருத்தைக் கூறுகின்றார். இதேபோன்றுதீர்வுத் திட்டம் தொடர்பில் அரசிடம் எந்தவொரு வேலைத் திட்டமும் இல்லை. எனவே, தீர்வை முன்வைக்குமாறு நான் கேட்கின்றேன்’.

மனோகணேசன்

ஜனநாயக முன்னணி தலைமையில் பாராளுமன்ற உறுப்பினரமான மனோகணேசன் கருத்து தெரிவிக்கையில்;

நலன்புரி முகாம்களிலுள்ள வடபகுதி மக்கள் பாரிய அவலங்களை எதிர்நோக்கியவாறு தவிக்கின்றனர்.அங்கு விலங்குகளை விட கேவலமான நிலையில் உள்ளனர்.இன்று யுத்தம் முடிவடைந்து பயங்கரவாதம் வெற்றி கொள்ளப்பட்டுள்ள நிலையில் தீர்வுத் திட்டம் அவசியமானது.

இந்தியாவுக்குத் தீர்வுத்திட்டம் தொடர்பில் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்லப்போவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

அரசிலுள்ள விமல்வீரவன்ஸ,சம்பிக்க ரணவக்கவின் கட்சிகளுக்கு வேறுஒன்று கூறப்பட்டுள்ளது.இதனால், வெளிநாட்டில் 13+, உள்நாட்டில் 13 (மறையாக) தீர்வுத்திட்டம் உள்ளது.

அமைச்சர் ராஜிதசேனாரட்ண பிரச்சினைக்கு அதிகார பகிர்வு மூலம் தீர்வு காணப்படும் என்றும் விமல்வீரவன்ஸ போன்றவர்களின் கதையைக் கணக்கிலெடுக்க வேண்டாமெனவும் தெரிவித்துள்ளார்.ஆனால், விமல்வீரவன்ஸ அமைச்சரவை அமைந்துள்ள அமைச்சர்களான ராஜிதசேனாரட்ண திஸ்ஸ விதாரண,டியூ.குணசேகர ஆகியோரை கோமாளிகள் என வர்ணித்துள்ளார்.

இப்படியான கோமாளிகளின் கதைகளை தவிக்குமாறு தமிழ் மக்களுக்கு உபதேசம் செய்வதைத் தவிர்த்து வாக்கெடுப்பு நடத்த முன்வரவேண்டும்.

அரசியல் தீர்வை முன்வைத்து சர்வ ஜன வாக்கெடுப்புக்கு விடும்போது இதற்கு எதிரானவர்கள் சார்பானவர்கள் என்ற இரு பிரிவினரே வருவர்.இதற்குக் கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று ஆதரவளிக்க தயார்.இந்நிலையில் ஐ.தே.க. மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றிணைந்து தீர்வு காண முன்வரவேண்டும்.

அமைச்சர்களான திஸ்ஸவிதாரண,ராஜிதசேனாரட்ண, டியூ.குணசேகர மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் 13 ஆவது திருத்தத்தை அமுலாக்குவது தொடர்பிலான இயக்கத்தை ஆரம்பித்துள்ளனர்.ஆனால், அது இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்களை அதிகாரமற்ற கொத்தடிமைகளாக்குவதற்காகவா யுத்த வெற்றி பயன்படுத்தப் போகின்றது எனக்கேட்கிறேன்.

நான் வடக்கு ,கிழக்கு மக்களின் பிரதிநிதியல்ல.எனினும் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதே முதலில் சிறந்தது.அதாவது,எமது அரசியலமைப்பின் தீர்வு குறித்து 13 ஆவது திருத்தம் மட்டுமேயுள்ளதால் இதனை அமுல்படுத்துவதன் மூலம் தீர்வின் ஆரம்பமாக அமையும்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பில் பல கட்சிகள் உள்ளனர்.அவற்றில் சில ஈழமென்ற புலிகளின் கோரிக்கையுடன் அண்மித்து செயற்பட்டனர்.இந்நிலையில், ஒரு இலங்கையின் கீழ் பொதுநிலைப்பாட்டுக்கு வந்து தீர்வுகாண முன்வரவேண்டும்.

சனத் மனமேந்திர

புதிய ஹெலஉறுமய கட்சியின் தலைவர் சனத் மனமேந்திர செய்தியாளர் மாநாட்டில் பேசுகையில்;

கட்சிக் கொள்கைக்கு சதிசெய்ததன் காரணமாகவே புதிய ஹெல உறுமயவை உருவாக்க வேண்டி வந்துள்ளது. 2005 ஜனாதிபதித் தேர்தலில் முன்வைக்கப்பட்ட மகிந்த சிந்தனையில் சகல மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை முன்வைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றே அன்று ஆதரித்து செயற்பட்டனர்.

இந்நிலையில், அதிகாரப்பகிர்வை ஏற்றுக்கொள்ள முடியாது. அமைச்சர் பதவிகளிலிருந்து வெளியேறுவோமென கூறியது வெட்கத்துக்குரிய விடயமாகும்.

13 என்ன 23,33 என்றாலும் பரவாயில்லை. பிரச்சினைக்குத் தீர்வாக எதனையாவது முன்வைக்கப்பட வேண்டும். தனித்து வடக்கு , கிழக்கு மட்டுமன்றி முழு நாட்டுக்கும் அதிகாரத்தை பரவலாக்க வேண்டும். மொனராகலையிலுள்ள பாடசாலைகள் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது.

இதனை நிவர்த்தி செய்ய வேண்டுமாகில் மாகாணசபையோ பிரதேச சபையோ பரிபாலிக்க வேண்டும். கொழும்பில் அதிகாரத்தை வைத்து செய்ய முடியாது. அதிகாரப்பகிர்வின் மூலமே நாடு அபிவிருத்தியடைந்து முன்னேற்றமடையும்.

ஜனாதிபதி ஜெனீவாவில் ஒன்று இந்தியாவில் ஒன்று உள்ளூரில் இன்னொன்று கூறுகின்றார். அம்பாறையென அம்பாந்தோட்டையென்ன தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் வாழ வழி செய்யப்பட வேண்டும்.

எனவே, அதிகாரப் பகிர்வை இடைநிறுத்தாது நிரந்தரமான யதார்த்தமான சமாதானத்தை பெற முன்வர வேண்டும். அன்று மாகாணசபையை எதிர்த்தவர்கள் இன்று அமைச்சர்களாகவும் உறுப்பினர்களாகவும் உள்ளனர். உதயன் கம்மன்பில மாகாண அமைச்சராகியுள்ளார். இவர்களுக்கு பகலில் ஒன்றையும் இரவில் வேறு ஒன்றையும் கூறுவதற்கு வெட்கமில்லையா? தீர்வுக்கு எமது கட்சி ஒத்துழைப்பு வழங்கத்தயார்.

Exit mobile version