வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் தேவைகளை அறிந்துகொள்வதற்கு அனுமதிக்க வேண்டுமெனத் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
திம்புக்கோட்பாட்டுக்குப் பின்னர் இலங்கையிலுள்ள தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து முதற்தடவையாகக் கோரிக்கையொன்றை விடுத்துள்ளன. கடந்த மாத இறுதிப் பகுதியில் கூடிய அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இந்த விடயம் குறித்துக் கலந்துரையாடி இணக்கப்பாடொன்றுக்கு வந்ததுடன், அனைத்துக் கட்சிகளும் கைச்சாத்திட்ட கோரிக்கையடங்கிய கடிதம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி., புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட அனைத்துத் தமிழ் கட்சிகளும் இந்தக் கோரிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குச் சென்று நேரடியாகப் பார்வையிடுவதற்கு அனுமதிக்குமாறு அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதேவேளை, அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாய்க்கிழமை சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.