Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முகாம்களிலுள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரையும் விடுதலைப் புலிகள் எனக் கருதி நடத்துவது தேசிய அவமானம்:HRW

மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த 3 லட்சம் தமிழர்கள் காலவரையறையின்றி முகாம்களில் தடுத்து வைக்கப்படும் அபா யம் குறித்து சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது.

இந்த மக்களை மீள் குடியமர்த்துவதற் கான உறுதியான திட்டங்கள் எவையும் இல் லாமையையும்  கடந்தகால செயற்பாடுகளை யும் சுட்டிக்காட்டி இந்த எச்சரிக்கையை நியூ யோர்க்கைத் தளமாகக் கொண்ட சர்வதேசமனித உரிமைக் கண்காணிப்பகம் விடுத் துள்ளது.

பருவப் பெயர்ச்சி மழை காரணமாக முகாம்களில் காணப்படும் நிலை மேலும்  மோசமடையலாம் என்றும் எச்சரித்துள்ள சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம்,  இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

சமீபத்தைய மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த 3 லட்சம் தமிழர்களை சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருப்பதை இலங்கை அரசு முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக இலங்கை அரசு சர்வதேச சட்டங்களை மீறி மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த அனைவரையும் இராணுவத்தால் நடத்தப்படும் முகாம்களில் குடும்பம் குடும்பமாக தடுத்து வைத்துள்ளது.

இவ்வருட இறுதிக்குள் அனைவரும் தத்தமது பகுதிகளில் மீளக் குடியமர்த்தப்படுவர் என அரசு தெரிவித்துள்ள போதிலும் கடந்த கால செயற்பாடுகளும் உறுதியான திட்டம் எதுவும் இல்லாததும் இந்த மக்கள் காலவரையறையின்றித் தடுத்து வைக்கப்படலாம் என்ற அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.

முகாம்களிலுள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரையும் விடுதலைப் புலிகள் எனக் கருதி நடத்துவது தேசிய அவமானம் என சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு ஏனைய  இலங்கைப் பிரஜைகள் போல நடமாடுவதற்கான சுதந்திரமும் விடுதலைக்கான உரிமையும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நடைபெற்ற பகுதிகளிலிருந்து வருபவர்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் உள்ளனரா என்பதை உறுதி செய்வதற்கு இலங்கை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது.
அதேவேளை, கண்மூடித்தனமாகத் தடுத்து வைப்பதும் தேவையற்ற விதத்தில் நடமாட்ட சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதும் சர்வதேச சட்டங்களின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளன.

விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்படும் எவரும் நீதிவான் ஒருவரின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். அல்லது குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும். அல்லது விடுதலை செய்யப்பட வேண்டும்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக நடமாட்ட சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதை மனித உரிமை சட்டங்கள் அனுமதித்தாலும் இதனைத் தெளிவான சட்ட அடிப்படையில் செய்ய வேண்டும்.

2008 மார்ச் மாதம் முதல் விடுதலைப் புலிகளின் பகுதியிலிருந்து வந்த அனைவரையும் இலங்கை அரசு நலன்புரி நிலையங்களிலும் தற்காலிக அகதி கிராமங்களிலும் தடுத்து வைத்துள்ளது.

சிறியளவானவர்கள் முக்கியமாக வயோதிபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் பெருமளவானவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் 40 முகாம்களில் 2 லட்ச்தது 78 ஆயிரத்து 203பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள பலரின் உறவினர்கள் அந்தப் பிராந்தியத்திலேயே உள்ளனர். அனுமதிக்கப்பட்டால் அவர்களுடன் இவர்கள் சேர்ந்து வாழ முடியும்.பலர் போக வேறு இடமில்லாததால் முகாம்களில் இருக்கவில்லை, அரசு அனுமதிக்காததாலேயே முகாம்களில் உள்ளனர் என பிரட் அடம்ஸ் சுட்டிக்காட்டுகின்றார்.

மன்னாரிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள் மே மாதத்திலேயே அரசு அனுமதித்த பின்னர் முகாம்களிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

Exit mobile version