Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முகாமில் பட்டினிப் போராட்டம் நடத்தும் ஈழத் தமிழர் : கண்டுகொள்ளாத ஈழ வியாபாரிகள்

chandira_kumar_poonthamalliபூந்தமல்லி சிறப்பு முகாமில் கடந்த எட்டு நாட்களாக உண்ணா நிலையில் இருக்கும் ஈழத்தமிழரான சாந்தகுமாரின் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.
சிறப்பு முகாமில் வாடும் ஈழத் தமிழர்கள் அனைவரும் திறந்தவெளி முகாமிற்கு மாற்றப் படவேண்டும், அவர்கள் குடும்பத்துடன் இணைந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பதே இவரது ஒரே கோரிக்கை ஆகும்.

வெளிநாட்டனர் வாழ் சட்டத்தின் படி அகதியாக வந்த ஒருவர் அவரது குடும்பத்துடன் முகாமில் வாழலாம். இப்படி ஒரு சட்டம் இருந்தும் பூந்தமல்லி சிறப்பு முகாமைப் பொறுத்தவரை குடும்பத்தை கூட பார்க்க இங்குள்ள முகாம்வாசிகளுக்கு அனுமதி இல்லை என்பது தான் கொடுமை.

கியூ பிரிவு காவல்துறை கண்காணிப்பில் இருக்கும் முகாம்வாசிகள் சொல்லவொன்னா துயரத்தில் வாடுகிறார்கள். பல ஆண்டுகளாக தங்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் இன்னுமும் அவர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை. சட்டத்திற்கு புறம்பாக இவர்களை வதை முகாமில் வைத்து வாட்டுகிறது கியூ பிரிவு காவல் துறை.

எட்டு நாட்களுக்கு முன்பும் சந்திர குமாரின் மனைவி மற்றும் அவரது இரு குழந்தைகள் இவரை பார்க்க முகாமிற்கு வந்த போது அவர்களை பார்க்க அனுமதிக்காமல் தடுத்தது காவல்துறை. அனுமதி மறுக்கப்பட்ட உடன் சாந்தகுமாரின் மனைவி அதே இடத்தில் அமர்ந்து போராடினார்.

ஒரு இரவெல்லாம் வெளியில் குழந்தைகளுடன் கிடந்தார் . பின்பு காவல்துறை அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. இதை கேள்விப் பட்ட சந்திரகுமார் தூக்க மாத்திரைகள் நிறைய உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

அவரை சக முகாம் வாசிகள் காப்பாற்றி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். உடனே அவரை அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்து சென்று காப்பாற்றிய காவல்துறை மீண்டும் அவரை முகாமில் கொண்டு வந்து அடைத்தது. சந்திரகுமாரின் மனைவி குழந்தைகள் புழல் சிறையில் இருந்து விடுதலை அடைத்தாலும் சந்திர குமார் இன்னும் அவரது உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடவில்லை.

எட்டாவது நாள் ஆகியும் அரசு தரப்பில் இருந்து யாரும் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. இவரது உண்ணா நிலையை முடித்து வைக்க ஒருவரும் முன்வரவில்லை.

இந்நிலையில் இவரது உடல் நிலை மோசம் அடைந்ததால் இனி என்ன நடக்கும் என்று தெரியாமல் அவரது குடும்பத்தார் வேதனையில் உள்ளனர். தமிழக அரசு உடனே இவ்விடயத்தில் தலையிட்டு சந்திர குமாரின் உயிரை காப்பாற்ற முன்வர வேண்டும் என்பதே அனைத்து தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது.

Exit mobile version