20.11.2008.
யாழ்ப்பாணம், முகமாலை முதல் கிளாலி வரையில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை படையினர் இன்று அதிகாலை முழுமையாகக் கைப்பற்றியதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக இடம்பெற்ற மோதலை அடுத்து இன்று அதிகாலை 5 மணியளவில் குறித்த நிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் போது விடுதலைப் புலிகளுக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் படைத்தரப்புக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் தொடர்ந்தும் கூறியதாவது
யாழ்ப்பாணம் முகமாலை மற்றும் கிளாலி பாதுகாப்பு முன்னரங்கு நிலையின் சுமார் 8 கிலோமீற்றர் நீளமான நிலப்பரப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ ரீதியில் மிக முக்கிய தளமாக விளங்கும் முகமாலை மற்றும் கிளாலி பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளைக் கைப்பற்றுவதற்காக படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியினை முறியடிக்கும் பொருட்டு விடுதலைப் புலிகளால் கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. புலிகளின் தாக்குதல்களை எதிர்க்கொண்டு படையினராலும் பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
கடந்த 15ஆம் திகதி முதல் குறித்த பகுதியில் இடம்பெற்ற இரு தரப்புக்கிடையிலான மோதல்களின் போது படையினர் மேற்கொண்ட ஷெல் மற்றும் ஆட்லறித் தாக்குதல்களில் மேற்படி பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை அண்மித்ததாக அமைக்கப்பட்டிருந்த புலிகளின் மண்அணை ஒன்று முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாதுகாப்பு முன்னரங்கு நிலையைக் கடந்து படையினர் முன்னகர்ந்து விடக் கூடாது எனும் பட்சத்திலேயே இந்த அணை கட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படகின்றது. நாகர்கோயில் முதல் கிளாலி வரை நீண்டு செல்லும் இந்த அணை முற்றாக அழிக்கப்பட்டதை அடுத்தே குறித்த பாதுகாப்பு முன்னரங்கு நிலை முழுமையாகக் கைப்பற்றப்பட்டுள்ளது.