வன்னியில் மீள்குடியேற்றப்பட்டடோர் எதிர் கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பாக பலரும் பலமுறையும் அரசாங்கத்திற்கு வேண்டுகோள்களை விடுத்து வந்திருந்தனர். மழைக்காலம் ஆரம்பிக்க இருந்த நிலையில், மழையினால் ஏற்படக்கூடிய நிலைமைகள் குறித்தும் தமிழர் தரப்பிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பிலும் சர்வதேச நிறுவனங்கள் தரப்பிலும் அரசாங்கத்திற்கு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருந்தன. ஆயினும் அரசாங்கம் அவற்றை கவனத்தில் எடுத்துச் செயற்படவில்லை என்பதுடன் வன்னியில் இராணுவ முகாம்களையும், பொலிஸ் நிலையங்களையும் அமைப்பதில் பாரிய முனைப்புக்களைக் காட்டி வந்தது.
வன்னியில் அடை மழை பெய்ய ஆரம்பித்து மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பெரும் அவல நிலையை எதிர்கொள்ளத் தொடங்கிய போது, அரசாங்கத்திற்கெதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் மீள்குடியேற்ற அமைச்சர் நிலைமைகள் குறித்து இவ்வாறு கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
மீள்குடியேற்ற அமைச்சர் மேலும் கூறுகையில், ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு 20 தகரங்களையும் வழங்கி வருகின்றோம். அது போதுமானது என நான் கூறவில்லை எனத்தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் 30 வருடங்களாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது எதிர்கொண்ட கஷ்டங்கள் தொடர்பில் யாரும் தற்போது பேசுவதில்லை. அக்காலத்தில்தான் மக்கள் அதிகளவு பிரச்சினைகளை எதிர்கொண்டனர். தற்போதைய நிலைமையில் நாங்கள் நிவாரண நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம் எனவும் மீள்குடியேற்ற அமைச்சர் தொவித்திருக்கிறார்.
நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ள வீரகேசரி நாளிதழ், இன்றைய ஆசிரியர் தலையங்கத்தில், ‘போரால் பாதிக்கப்பட்ட மக்கள் நிரந்த வீடுகளை அமைத்துக் கொடுப்பது குறித்து தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகின்றதே தவிர அவை இதுவரை நடைமுறைப்படத்தபடாதிருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது. கடந்தகாலங்களில் தத்தமது சொந்த வீடுகளில் நிம்மதியாக வசித்து வந்த மக்களே இன்று அனைத்தையும் இழந்து அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.” என்ற கருத்தை முன்வைத்துள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சின் கருத்து, மீள்குடியேற்றப்பட்டோர் தொடர்ந்தும் பிரச்சினைகளுக்குள்ளே வாழவேண்டியே இருக்கும் என்பதைத் தெளிவாகவே உணர்த்தியிருக்கிறது.
பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்பதற்கான அரசாங்கத்தின் மனிதாபிமான இராணுவ நடவடிக்கை வன்னிப் பிரதேசத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது !