இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் நடுக்கடலில் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவர்களை படுகொலைக்குக் காரணமான சோனியா, மன்மோகன், ராஜபக்ச ஆகியோர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கோரி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட பாரம்பரிய மீனவர்கள் சங்கத்தைச் சேர்ந்த 8 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 2ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற இந்த 4 மீனவர்களின் உடல், காயமுற்று, சிதைந்த நிலையில் கறை ஒதுங்கியது மீனவர்கள் மத்தியில் சினத்தை மூட்டியுள்ளது. இராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சென்னை கலங்கரை விளக்கம் அருகே பாரம்பரிய மீனவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பட்டினிப் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் வைத்துள்ளனர்.
இந்தப் போராட்டம் குறித்து பேசிய பாரம்பரிய மீனவர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.மகேஷ் பேசுகையில், 1974வது ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி பாக் நீரிணைப்பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை இருந்தது, இருக்கிறது. இந்த நிலையயில், எல்லைத் தாண்டிச் சென்று மீன் பிடிக்கும் மீனவர்களை நாங்கள் காப்பாற்ற முடியாது என்று அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா பேசியுள்ளார். இது நமது நாட்டு மீனவர்களை கொல்வதற்கு சிறிலங்க படைகளுக்கு உரிமை கொடுப்பது போல் உள்ளது. சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், எஸ்.எம்.கிருஷ்ணா, சிறிலங்க அதிபர் ராஜபக்ச ஆகியோர் மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம், அவர்களை கைது செய்ய வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.
இதுவரை மீனவர்கள் கொல்லப்படும்போது, எவராவது ஒருவரை மட்டும் கொன்றுவிடுவர், மற்றவர்கள் திரும்பி விடுவர். இப்போது படகில் இருந்த 4 மீனவர்களையும் கொன்றுள்ளனர்.
எங்களுடை மற்றொரு கோரிக்கை சிறிலங்க அரசுடனான இராஜிய உறவுகள் அனைத்தையும் அறுத்துக்கொள்ள வேண்டும். இங்கு சென்னையில் சிறிலங்க துணைத் தூதரகம் இருக்கக் கூடாது என்பதே என்று மகேஷ் கூறியுள்ளார்.