சர்வதேசக் கடல் பரப்பில் சம்பவம் நடந்திருப்பதால் அதை விசாரிக்கும் அதிகாரம் இந்திய நீதிமன்றங்களுக்கு இல்லை என்பதுதான் இத்தாலியர்கள் ஆரம்பம் முதலே கூறிவரும் வாதம். அதற்கு வலுசேர்க்கும் வகையில் அரசின் தலைமை கூடுதல் வழக்குரைஞரே பேசியது ஏன் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்திருக்கிறது.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தாரும் மீனவ சமுதாயத்தினரும் மீனவத் தொழிற்சங்கத்தினரும் இதனால் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளனர்.
மீனவர் சுட்டுக்கொலை: இத்தாலியின் திமிர்த்தனம்! இந்தியாவின் அடிமைத்தனம்!!
கேரளத்தின் கொல்லம் மீன்பிடி துறைமுகம் அருகே, இந்திய கடல் எல்லைக்குட்பட்ட அரபிக் கடல்பகுதியில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதியன்று மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, “என்ரிகா லாக்ஸி” என்ற இத்தாலி நாட்டு எண்ணெய்ச் சரக்குக் கப்பலில் இருந்த பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜெலஸ்டின், அஜீஸ்பிங்கு ஆகிய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொடுஞ்செயலுக்காக கொலைகாரர்களைக் கைது செய்து தண்டிக்கவும், கொல்லப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு அக்கப்பல் நிர்வாகத்திடம் நிவாரணம் பெறவும், மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்காத இந்திய அரசு, ஏகாதிபத்தியவாதிகளின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து தனது ஏகாதிபத்திய விசுவாசத்தை மீண்டுமொருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது.
இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இத்துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதால், கடலோரக் காவற்படை அந்தக் கப்பலை கொச்சி துறைமுகத்துக்குக் கொண்டுவந்து, மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கைது செய்ய முயன்ற போது, எச்சரிக்கை செய்தபோதிலும் விலகிச் செல்லாமல் தங்கள் கப்பலை நோக்கி படகு வந்ததால், கடற்கொள்ளையர்கள் என்று கருதி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அக்கப்பலின் தலைமை மாலுமி நியாயவாதம் பேசி கைது நடவடிக்கையைத் தட்டிக் கழித்துள்ளார். ஆனால், கப்பலிலிருந்து பைனாகுலர் மூலம் பார்த்தாலே படகில் வருவது மீனவர்களா, அல்லது கடற்கொள்ளையர்களா என்பது தெரிந்துவிடும்.
மேலும், இது எச்சரிக்கைக்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அல்ல என்பதை மீனவர்களின் படகில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு பாய்ந்திருப்பதே நிரூபித்துக் காட்டுகிறது. சர்வதேசக் கடல் எல்லையில்தான் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாகப் புளுகி, இந்தியச் சட்டத்துக்கு நாங்கள் கட்டுப்பட முடியாது என்று அந்த இத்தாலிக் கப்பலின் தலைமை மாலுமி திமிராகக் கூறியுள்ளார். இவற்றை நிராகரித்து உடனடியாகக் குற்றவாளிகளைக் கைது செய்வதற்குப் பதிலாக, இந்திய அரசு பணிந்து போய் அக்கப்பலின் பாதுகாப்புப் படைச் சிப்பாய்கள் இருவர் மீது முதல் தகவல் அறிக்கை மட்டும் பதிவு செய்தது.
இத்தாலிய தூதரக அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 நாட்களுக்குப் பின்னர்தான், கொலைகாரர்களான மசிமிலியானோ லதோர் மற்றும் சல்வடோர் கிரோனே என்ற இரண்டு பாதுகாப்புப்படை சிப்பாய்களைச் சரணடையுமாறு கேரள போலீசு கோரியது. ஆனாலும்,கெடு முடிந்து 8 மணிநேரத்துக்குப் பின்னர்தான் அவர்களை அக்கப்பலின் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தும்போது இத்தாலிய தூதரக தலைமை அதிகாரியும் பாதுகாப்பு அதிகாரியும் உடன் இருப்பதற்கும் இந்தியா ஒப்புக் கொண்டது. கொச்சி அருகே மத்திய தொழிற்பாதுகாப்புப் படையின் விருந்தினர் மாளிகையில் வைத்து ராஜமரியாதையுடன் ‘விசாரணை’ நடந்துள்ளது. அதன் பின்னரே அவர்கள் கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி டெல்லி வந்த இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர், இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவு இந்த விவகாரத்தால் பாதிக்கப்படக் கூடாது என்றும், அந்நிய மண்ணில் எங்கள் நாட்டினர் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டால், இத்தாலிய சட்டப்படிதான் விசாரிக்க முடியும் என்றும் எச்சரித்தார். இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், குண்டுகள் முதலானவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தவும் இத்தாலி ஒத்துழைக்கவில்லை. அக்கப்பல் அதிகாரிகள் அவற்றை ஒரு அறையில் வைத்துப் பூட்டி, இத்தாலிய அதிகாரிகளிடம் அல்லது சர்வதேசிய புலனாய்வு அமைப்பினரிடம் மட்டுமே அவற்றை ஒப்படைக்க முடியும் என்று திமிராகக் கூறிவிட்டனர். நீண்ட இழுபறிக்குப் பின்னரே, இந்திய மற்றும் இத்தாலிய அதிகாரிகள் சேர்ந்து விசாரணைக்காக அத்துப்பாக்கிகளைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவில் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டால், உடனடியாகக் கைது செய்யும் இந்திய அரசு, ஏகாதிபத்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் கொலைக்குற்றங்களில் ஈடுபட்டால்கூட கைது செய்து தண்டிக்க முன்வராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. இந்திய சட்டப்படியே இச்சம்பவத்துக்குத் தீர்வு காணப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ள போதிலும், அதன் ஒவ்வொரு நடவடிக்கையும் அடிமையை விஞ்சும் விசுவாசத்துடன் இந்த விவகாரத்தை நீர்த்துப் போக வைக்கும் திசையில்தான் உள்ளன.
அரபிக்கடல் பகுதியில் இதுவரை சோமாலியக் கடற்கொள்ளையர்களின் தாக்குதலே நடந்திருந்தாத நிலையில், சோமாலியக் கொள்ளையர்கள் என்று தவறாகக் கணித்து இத்தாலிய வணிகக் கப்பலின் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், ஒருவிதப் பதற்றத்தில்தான் இத்துப்பாக்கிச் சூடு நடந்திருக்குமேயொழிய, சிங்கள ராணுவத்தைப் போல வெறிகொண்டு நிகழ்த்தியிருக்க வாய்ப்பில்லை என்றும் இந்திய ஆட்சியாளர்களின் நோக்கத்துக்கு ஏற்ப தினமணி தலையங்கம் எழுதுகிறது. துனா மீன்களுக்கு மிகப்பெரிய வலை விரித்திருக்கும் மீனவர்கள், வர்த்தகக் கப்பல்கள் அந்த வழியில் வரும்போது அவற்றால் தங்கள் வலைகள் சேதமடையும் என்று பயந்து, மீன்பிடி படகுகளைக் குறுக்கே கொண்டுபோய் நிறுத்தி அந்தப் பெரிய கப்பல்களை விலகிப் போகச் செய்வார்கள் என்பதால், ஒரு மீன்பிடிப் படகு தங்களை நோக்கி முன்னேறி வருகிற நிலையில், இத்தாலியக் கப்பலில் இருந்த பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கவும் வாய்ப்புள்ளது என்று இத்தாலியக் கப்பலின் தாக்குதலுக்கு வக்காலத்து வாங்கி, மீனவர்களின் மீது பழியைப் போடுகிறது.
தற்போதைய இத்தாலியக் கப்பல் விவகாரம் மட்டுமல்ல; அதற்கு முன்பாக நடந்துள்ள ஏராளமான விவகாரங்களிலும் இந்திய அரசின் அடிமைத்தனமும் ஏகாதிபத்திய விசுவாசமும் நாடெங்கும் நாறிப் போயுள்ளது. 1995 டிசம்பரில் மே.வங்கத்தின் புருலியாவில்இரகசியாக ஆயுதங்களை விமானம் மூலம் இறக்கிய சர்வதேச கிரிமினல் குற்றக் கும்பலைச் சேர்ந்த பிரிட்டனின் பீட்டர் பிளீச் மற்றும் 5 லாட்விய நாட்டினர் கைது செய்யப்பட்ட பின்னர், ரஷ்ய வல்லரசு மற்றும் பிரிட்டனின் நிர்ப்பந்தங்களால் இக்குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர்.
இந்திய முன்னாள் அரசுத் தலைவர் அப்துல் கலாம், முன்னாள் இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ், இந்தியத் தூதரகப் பெண் அதிகாரி உள்ளிட்ட பல பிரபலமான இந்தியர்கள் அமெரிக்க விமான நிலையங்களில் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டபோதும், அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் கிரிமினல்களைப் போல கண்காணிக்கப்பட்டபோதும், இந்த அவமதிப்புகளுக்கு எதிராக இந்தியா வாய் திறக்கவில்லை. இந்திய அரசு, தனது ஏகாதிபத்திய விசுவாசத்தை வெளிக்காட்டியிருப்பதையே, இத்தாலியக் கப்பல் விவகாரம் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
___________________________________________
– புதிய ஜனநாயகம், மார்ச் – 2012
___________________________________________