Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மீண்டும் பேச்சுவார்த்தை: பசில் ராஜபக்ஷ

விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த இலங்கை அரசு தயாராக உள்ளது என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷவின் சகோதரரும் அவரது ஆலோசகருமான பாசில் ராஜபக்ஷ கூறினார்.

பேச்சுவார்த்தைக்கு நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம். ஆனால் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிடும்வரை மீண்டும் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிபர் ராஜபக்ஷ நிபந்தனை விதித்துள்ளது குறித்து கேட்டபோது, என்னென்ன நிபந்தனைகள் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார் பாசில்.

ஆனால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அதிபர் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். விடுதலைப் புலிகள் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள்தான் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் மட்டுமே தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகள் என்பதை ஏற்க முடியாது. இது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழர்களிடம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவே இல்லை. விடுதலைப் புலிகளுக்கு செல்வாக்கே இல்லை என்று நான் சொல்லவில்லை. அவர்களுக்கென்று குறிப்பிட்ட செல்வாக்கு உள்ளது என்றார் அவர். ஆனால் விடுதலைப் புலிகள் போக்கு ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே அரசு எப்போதும் விரும்புகிறது. இருப்பினும் தற்போதைய நிலையில் மீண்டும் போர் நிறுத்தம் அறிவிக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறினார். வெள்ளிக்கிழமையிலிருந்து போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கப் போவதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். அரசு தரப்பில் இது ஏற்றுக்கொள்ளப்படுமா என்று கேட்டபோது, இது குறித்து முடிவு செய்ய காலஅவகாசம் தேவை என்றார் பாசில்.

ஒரு நாளில் இதை முடிவு செய்துவிட முடியாது. எல்லாவற்றையும் யோசித்து முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் அவர் கூறினார்.

விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கும் அதேவேளையில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை. அதோடு பயங்கரவாதமும் ஒடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
-தினமணி நாளிதள் சென்னை

Exit mobile version