இதேவேளை, பிரதம நீதியரசருக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு கைவிடாவிட்டால், இந்த விடயத்தை சர்வதேசம் கொண்டு சென்று நாட்டின்மீது பொருளாதாரத் தடைவிதிப்பதற்கான அபாயகரமான சூழ்நிலையை ஏற்படுத்தவும் தயங்கமாட்டோம் எனவும் பொது எதிரணிக் கட்சிகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பொது எதிரணிக் கட்சிகள் மேற்கண்டவாறு தெரிவித்தன.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் கலாநிதி குமரகுருபரன், வடக்கில் தற்போது ஒரு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கிலுள்ள இளைஞர்களும், யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் புலிகள் என முத்திரை குத்தப்பட்டு அரசால் தொடர்ந்தும் கைது செய்யப்படுகின்றனர்.
தமது இறந்த உறவுகளை நினைவுகூர்ந்ததற்காகவே அரசால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது மிகவும் ஒரு தவறான விடயமாகும். அரசின் இந்த நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் அவதானித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
வடக்கிலுள்ள தமிழ் இளைஞர்களுக்குப் புலி முத்திரை குத்துவதனூடாகத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை பின்நோக்கி நகர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது. மீண்டும் கறுப்பு நாள் நோக்கிய பயணத்திற்கு நாட்டை இட்டுச் செல்கின்றது.
புலிகள் மீண்டும் உருவாகக்கூடிய சூழ்நிலை வடக்கில் நிலவுகிறது என பூச்சாண்டி காட்டி, அங்கு மீண்டும் பதற்றமான சூழ்நிலையை அரசு ஏற்படுத்திவருகிறது. இறந்த உறவுகளை நினைத்து அஞ்சலி செலுத்தும் உரிமை வடக்கிலுள்ள தமிழர்களுக்கு இல்லையா?
நாட்டில் உயர் பதவி வகிக்கின்ற பிரதம நீதியரசருக்கே இன்று ஓர் அசௌகரிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்றால், அப்பாவி மக்களின் கதி பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை கூறியுள்ளார்.
அதேவேளை அங்கு உரையாற்றிய புதிய சிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திர, நாட்டின் நான்காம் நிலையிலுள்ள பிரஜையான பிரதம நீதியரசருக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. இந்த நடவடிக்கைகளை அது கைவிடாவிட்டால், மேற்படி விடயத்தை ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தொடர் ஆகியவற்றின் கவனத்துக்கு எடுத்துச்சென்று நாட்டின் மீது பொருளாதாரத் தடைவிதிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திவிடுவோம் என தெரிவித்துள்ளார்.
நவசமசமாஜக் கட்சியின் உறுப்பினர் லங்கா பேலி கருத்து வெளியிடுகையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வடக்கிலுள்ள இளைஞர்களை அரசு கைதுசெய்கிறது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் எங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அவர்களது பெற்றோர்களுக்குக் கூட தெரியவில்லை.
அதுமட்டுமன்றி, அண்மையில் வடக்கிலுள்ள தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். ஆனால், அவர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டமைக்குச் சான்றாக நியமனக் கடிதம்கூட இராணுவத்தினரால் அவர்களிடம் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.