Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மீண்டும் பாரிய நிதி நெருக்கடியில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்?

21.09.2008

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மீண்டும் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும் அதன் ஊழியர்களுக்கு செப்டெம்பர் மாதச் சம்பளம் வழங்கக் கூட நிதி பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக உடனடியாக 10 கோடி ரூபாவை பெற்றுத் தருமாறு தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷண யாப்பா திறைசேரியிடம் கேட்டிருக்கின்றார்.

இதன் பொருட்டு அமைச்சர் விஷேட அமைச்சரவைப் பத்திரமொன்றை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்திருக்கின்றார்.

ஏற்கனவே, இவ்வருடத்துக்கான மேலதிகச் செலவினத்துக்காக திறைசேரி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு 10 கோடி ரூபாவை ஒதுக்கிக் கொடுத்திருந்தது. அந்த நிதி ஆகஸ்ட் மாதத்துடன் செலவாகி முடிந்து விட்டதாகவும் அடுத்த மூன்று மாத காலத்துக்கு மேலும் 10 கோடி ரூபாவை ஒதுக்கித்தருமாறும் அமைச்சர் அநுர யாப்பா கேட்டிருக்கின்றார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மாதாந்தம் 34 மில்லியன் ரூபாவையே வருமானமாகப் பெறுவதாகவும் அதேநேரம், மாதாந்த செலவீனம் 59 மில்லியன் ரூபாவெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கடந்த 12 வருடங்களாக தொடர்ந்து நட்டத்தையே எதிர் கொண்டு வருவதாகவும் இந் நிதி நெருக்கடியை நிவர்த்திப்பதற்கு குறுகிய கால, நீண்டகாலத்திட்டங்கள் இரண்டை கடைப்பிடிப்பதற்கும் அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷண யாப்பா தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version