Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மீண்டும் தொடங்கும் வன்முறைக் கலாச்சாரம் – காடையர்களால் தாக்கப்பட்ட ராஜ்

“கருத்துக் கூறிய ஒரே காரணத்திற்காக” புலி ஆதரவுக் காடையர்களால் இன்று (23.06.2011) பிற்பகல் ராஜ் என்பவர் மிருகத் தனமாகத் தாக்கப்பட்டுள்ளார். முப்பது வருட வன்முறைக் கலாச்சாரத்த்தின் அவமானகரமான குறியீடுகளாகத் திகழும் இந்தக் காடையர்கள் பிரித்தானியச் சட்டவரம்புகளைக் கூட மதிப்பதில்லை.

ஏழாம் திகதி ஜுன் மாதம் புலி இலச்சனை பொறிக்கப்பட்ட கொடியைப எமது போராட்டங்களில் உபயோகப்படுத்துவதன் அரசியல் பின்விளைவுகள் குறித்த விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு தனது கருத்துக்களைத் தெரிவித்த ராஜ் என்பவரே ராம் என்ற புலி ஆதரவளரும் செயற்பாட்டாளருமான ஒருவரால் தாக்கப்படுள்ளார். நியூ மோல்டன் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட ராம் முன்னதாக பிரித்தானிய தமிழ் அமைப்பு ஒன்றுடன் தன்னை அடையாளப்படுத்தி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய நியூ மோல்டன் பகுதியில் காரை நிறுத்திவிட்டு வன்னியன் பூட் என்ற பலசரக்குக் கடையில் கொள்வனவு செய்யச் சென்ற ராஜை அங்கு தெருவில் நின்ற ஒருவர் அழைத்திருக்கிறார்.

முதலில் கடைக்கு முன்னால் ராஜ் ஐத் தாக்கிய ராமின், காடைத்தனத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கடைக்குள் சென்றுள்ளார். அவ்வேளையில் தனது கைத்தொலைபேசியில் வேறு சிலரையும் அங்கு தாக்குதலுக்கு அழைத்த ராம், ராஜைத் தொடர்ந்து மிரட்டியுள்ளார். இரும்புக் கம்பி ஒன்றை எடுத்து கொலை செய்யப் போவதாகப் பயமுறுத்தல் விடுத்துள்ளார். பின்னர் சோடாப் போத்தல் ஒன்றை உடைத்து ராஜைக் கொலை செய்ய முற்படும் போது அங்கிருந்த பலர் அவரைத் தடுத்துள்ளனர்.

இதற்கிடையில் பிரித்தானியக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

போலீசாரைக் கண்ட ராமும் உம் பின்னதாக அவருடன் இணைந்து கொண்ட ஏனைய காடையர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இலங்கையில் ராஜபக்ச குடும்ப அரசின் காடைத்தனத்திற்கும் பேரினவாத அரச வன்முறைக்கும் எதிரான செயற்பாட்டாளர்களின் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத இலங்கை அரச கோளைகள் வன்முறையை மட்டுமே தமது ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். அரச பயங்கரவாதிகளின் அதே வழிமுறையில், கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத காடையர்கள் தமது கையாலாகத் தனத்தை வன்முறையாக கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான வீரம் செறிந்த விடுதலை போராட்டத்தை அதிகாரங்கள் சில மாதங்களில் இரத்தமும் சதையுமாக சிதைத்து, அப்பாவி மக்களின் இரத்ததை நந்திக்கடலோடு கரைத்த கோரத்தின் அவலக் குரல்கள் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

நியாயமான போராட்டம் இரவோடிரவகச் சாம்பலாக்கப்படதற்கு ஜனநாயக மறுப்பும், கொலைகளும், வன்முறைகளும் அவற்றை நிறைவேற்றும் காடையர்களும் பிரதான காரணங்களுள் சிலவாகும்.

முப்பது வருடப் போராட்டம் வன்முறையும், வக்கிரமும், முட்டாள்தனமும், பழிவாங்கும் உணர்வும், சுயநலமும் கொண்ட மனநோயாளிகளையும் எம்மத்தியில் உருவாக்கியுள்ளது. ராம் என்பவர் அந்த வன்முறைக் கலாச்சாரத்தின் முகப்பு.

ஒடுக்கும் இலங்கை அரச பாசிசத்தை வளர்க்கும் சமூகவிரோதச் செயல்களின் ஆரம்பமே ராம் போன்றவர்களின் காடைத்தனம்.

மக்கள் பற்றும், சமூக பிரக்ஞையும் கொண்ட அனைத்து ஊடகங்களும் இந்த வன்முறைக் கலாசாரத்தை அனைத்து வழிகளிலும் எதிர்க்க வேண்டும். ஜனநாயக விழுமியங்களையும், கருத்துரிமையையும், பாதுகாக்கத் தவறுகின்ற ஒவ்வொரு தடவையும் இன்னொரு முள்ளி வாய்க்காலை புலம் பெயர் நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யத் தயாராகிறோம். தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஈழ மக்களின் உணர்வுகளையும் இன்னொரு தடவை சிதைக்க ஆரம்பித்துவிட்டோமா என அச்சம் ராமிலிருந்து ஆரம்பமாகிறது.

Exit mobile version