இங்கே இரண்டு முக்கிய விடையங்கள் அவதானிக்கப்பட வேண்டும். முதலில் மிகவும் சிக்கல் நிறைந்த காலகட்டத்தில் போராடுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை என்று எண்ணிய போராளிகளின் உணர்வு. இரண்டாவதாக அவர்களின் திட்டமிடாத அரசியலற்ற வழி முறைகள். முதலில் போராளிகளின் போராட்ட உணர்வை மதிப்பதும், இரண்டாவது போராட்டத்தை விமர்சிப்பதும் இன்றைய காலத்தின் தேவை.
புலம்பெயர் நாடுகளில் தாமே புலிகளின் தொடர்ச்சி எனக் கூறி உணர்ச்சி வியாபரம் நடத்தும் ஊடகங்களும் அமைப்புக்களும் இவர்கள் மூவரும் இலங்கை அரசால் தூண்டப்பட்ட நபர்கள் என்று கூறி போராளிகளை அவமானப்படுத்தியுள்ளன. கடந்த காலம் குறித்த எந்த விமர்சன- சுயவிமர்சனப் பார்வைகளற்று புலிகள் என்ற அடையாளத்தை மூலதனமாக்கி ‘தேசிய வியாபாரம்’ நடத்தும் இவர்கள் மூன்று போராளிகளையும் மீண்டும் ஒரு தடவை படுகொலை செய்துள்ளனர்.
சமூக உணர்வும் மக்கள் பற்றும் அற்ற இப் பிழைப்புவாதக் கும்பல்கள் மக்கள் மத்தியிலிருந்து அகற்றப்பட வேண்டும். மக்கள் சார்ந்த அரசியல் இயக்கம் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக முன்னெடுக்க வேண்டும்.