Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவோயிஸ்ட் தாக்குதல் 100 படையினர் பலி

சட்டீஸ்கர் மாநிலம் டாண்டேவாடாவில் இன்று காலை மாவோயிஸ்ட்கள் நடத்திய படு பயங்கரமான தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 100  காவலர்கள் பலியாயினர்.

சடலங்களை மீட்க ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

120 பேர் கொண்ட சி.ஆர்.பி.எஃப். படையினர் இன்று காலை சாலை திறப்புப் பணி ஒன்றை முடித்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தனர். சிண்டல்னர், டர்மெட்லா ஆகிய பகுதிகளுக்கு இடையே வந்துகொண்டிருந்தபோது, முக்ரனா வனப்பகுதியில் இந்தத் தாக்குதலை சுமார் 1000 பேர் கொண்ட நல்ல பயிற்சி பெற்ற மாவோயிஸ்ட்கள் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

முதலில் காவல்படையினர் வந்த வாகனம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திறந்த வெளியில் வந்த படையினர் மீது மாவோயிஸ்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

மேலும் 6 இடங்களில் மாவோயிஸ்ட்களுக்கும், காவல்துறையினருக்கும் சண்டை நடந்து வருவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. மாநிலத்தின் உயர் காவலதிகாரிகள் தாக்குதல் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலை காட்டுமிராண்டித் தனமானது என்று வர்ணித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தான் அதிர்ச்சியில் உறைந்திருப்பதாக தெரிவித்தார்.

மாவோயிஸ்ட்கள் நாட்டின் முதல் எதிரிகள் என்று உள்துறை அமைச்சர் நேற்று ப.சிதம்பரம் பேசியதையடுத்து இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.மேலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version