Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவோயிஸ்ட் தாக்குதலில் 26 படைவீரர்கள் பலி.

எஸ்ஸார், வேதாந்தா, போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்குக்காகவும் உள்ளூர் இந்திய பெரு முதலாளிகளின் நலன்களுக்காகவும் தண்டகாரண்யா மக்கள் மீது க்ரீன்கண்ட் என்னும் போரை கட்டவிழ்த்து விட்டுள்ளது இந்திய அரசு. பல கோடி டிரில்லியன் டாலர்கள் பெருமதியுள்ள கனிம வளங்களுக்காக கொள்ளைக்குத் துணைபோகும் இந்திய அரசை எதிர்த்து நிற்கிறார்கள் பழங்குடி மக்கள். அவர்களின் போராட்டங்களை வழி நடத்துகிறார்கள் மாவோயிஸ்டுகள். இராணுவத்தினரின் தாக்குதலதுக்கு பதிலடியாக மாவோயிஸ்டுகளும் கடும் தாக்குதலை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் சத்தீஸ்கர் உள்பட சில மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 2 நாள் வேலைநிறுத்தத்துக்கு மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து ,மாவோயிஸ்டுகள் அதிகம் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தில் அடர்ந்த வனப் பகுதியில் 39-வது படைப் பிரிவைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் மாநில போலீஸôர் உள்பட 63 பேர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் பணியை முடித்துவிட்டு சாலை வழியாக முகாமுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது மலை மேல் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் திடீரென படை வீரர்களைச் சுற்றிவளைத்து தானியங்கிதுப்பாக்கி மூலம் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் சிஆர்பிஎஃப் உதவி கமாண்டண்ட் ஜடின் குலாத்தி உள்பட 26 வீரர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் சத்தீஸ்கர் மாநில போலீஸ் பிரிவைச் சேர்ந்த நான்கு சிறப்பு போலீஸ் அதிகாரிகளும், நான்கு சிஆர்பிஎஃப் வீரர்களும் காயமடைந்தனர். இவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் 90 மாவோயிஸ்டுகள் இத்தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டில் மாவோயிஸ்டுகள் நடத்திய மூன்றாவது பெரிய தாக்குதல் இது. இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம், தந்தேவாடா கிராமத்தில் நடந்த தாக்குதலில் 76 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதன்பிறகு மே 8-ம் தேதி நாராயண்பூர் மாவட்டத்தில் கண்ணிவெடித் தாக்குதலில் 8 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

Exit mobile version