Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவோயிஸ்டு பிரச்னைக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்: டி.​ ராஜா

 மக்கள் பிரச்னைகளுக்கு ஆயுதப் போராட்டம் மூலம் தீர்வு காண்பது என்ற மாவோயிஸ்டுகளின் வழிமுறையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை.​ அதே நேரத்தில்,​​ மாவோயிஸ்டுகளை ஒடுக்க ராணுவத்தைப் பயன்படுத்துவதையும் ஏற்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.​ ராஜா கூறினார்.

 இது குறித்து அவர் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாவோயிஸ்டு பிரச்னைக்கு கருத்து ரீதியிலான போராட்டங்கள் மற்றும் அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்.​ இப்பிரச்னைக்கு ராணுவ பலத்தைப் பயன்படுத்தி தீர்வு கண்டு விடலாம் என்ற உள்துறை அமைச்சர் ப.​ சிதம்பரத்தின் அணுகுமுறை மிகவும் தவறானது.​ இதனால் பிரச்னை மேலும் வளரவே செய்யும்.

மாவோயிஸ்டுகளின் வலிமை அதிகரிக்க மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம்.​ பன்னாட்டு பெரும் நிறுவனங்களின் கொள்ளை லாபத்துக்காக ஏராளமான கனிமச் சுரங்கங்களையும்,​​ பெருமளவில் வனப் பகுதியையும் மத்திய அரசு தாரை வார்த்துள்ளது.​ இதனால் பல்லாயிரக்கணக்கான ஆதிவாசி மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் இதுபோன்ற அணுகுமுறைகளில் மாற்றம் வந்தால்தான் மாவோயிஸ்டு பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.​ எனினும்,​​ மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டு,​​ மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகளை பழி சுமத்துவதால் எந்தப் பயனும் இல்லை.

நாடு தழுவிய மறியல்:​ அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் கண்டித்து 4 இடதுசாரி கட்சிகளின் சார்பில் வரும் 8}ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நாடு தழுவிய மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

விலைவாசியைக் கட்டுப்படுத்த பொது விநியோக முறையை சீர்படுத்த வேண்டும்.​ அனைத்து தரப்பு மக்களுக்கும் பொது விநியோக முறை மூலம் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

​ கள்ளச் சந்தையையும்,​​ பதுக்கல்காரர்களையும் ஒழிக்க அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

எனினும் மத்திய அரசோ,​​ சந்தைப் போக்கால் விலைவாசி தானாகக் கட்டுப்படுத்தப்படும் என்று கூறி,​​ தனது பொறுப்பை உணர மறுக்கிறது.​ இப்போதைய பிரச்னைகள் அனைத்துக்கும் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே காரணம்.

இந்தக் கொள்கைகளை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்.​ இல்லையெனில் இதர ஜனநாயக சக்திகளை இணைத்துக் கொண்டு,​​ அரசுக்கு எதிரான எங்கள் போராட்டம் மேலும் தீவிரமடையும்.

வெட்டுத் தீர்மானம்:​ நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் நிதி மசோதாவுக்கு எதிராக வெட்டுத் தீர்மானம் கொண்டு வர உள்ளோம்.​ வெட்டுத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் மூலம்,​​ இந்த அரசின் கொள்கைகளுக்கு பலத்த எச்சரிக்கையை தெரிவிக்க உள்ளோம்.

கச்சத் தீவு:​ நமது மீனவர்களுக்கு உள்ள உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில்,​​ கச்சத் தீவு ஒப்பந்தத்தை திருத்த வேண்டும்.​ இதன் மூலம் மட்டுமே மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.​ எனவே,​​ கச்சத் தீவு ஒப்பந்தம் தொடர்பாக மறு பேச்சுவார்த்தை நடத்துமாறு தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றார் டி.​ ராஜா.

பேட்டியின்போது கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.​ மகேந்திரன் உடனிருந்தார்.

Exit mobile version