Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவவில்லை: ப.சிதம்பரம்

மாநிலங்களவையில் இது குறித்த கேள்வியொன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ‘’ மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் அதை நிரூபிக்கும் ஆதாரங்கள் எதுவும் அரசுக்கு கிடைக்கவில்லை. மேலும் மாவோயிஸ்டுகளுக்கு தேச விரோத சக்திகள் உதவுகின்றனவா என்பது பற்றிய தகவலும் அரசுக்கு வரவில்லை. அதற்கான ஆதாரங்களும் அரசுக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் நேபாளத்தில் உள்ள அமைப்பு ஒன்றுக்கும் நெருக்கம் இருப்பதாக மட்டும் உறுதி செய்யப்படாத தகவல் அரசுக்கு கிடைத்துள்ளது என்றார். இருப்பினும், மாவோயிஸ்டுகளுக்கு வெளிநாடுகள் உதவுவதாக வரும் செய்தி அடிப்படையில் அது எந்த அளவுக்கு உண்மை என்பதை உறுதி செய்ய இந்தியாவுக்கு நேசமாக உள்ள நாடுகளின் உதவியை கோர அரசு திட்டமிட்டுள்ளது. மிரட்டி பணம் பறிப்பது மற்றும் வங்கிகளிடமிருந்து பணத்தை சூறையாடுவது போன்ற வழி முறைகளை கையாண்டு மாவோயிஸ்டுகள் நிதி திரட்டுகின்றனர். மியான்மர், வங்கதேச எல்லை வழியாக ஆயுதங்களை கடத்தி வருகின்றனர் என்றும் சிதம்பரம் கூறினார். மாவோயிஸ்டுகள் தம்மிடம் உள்ள கறுப்பு பணத்தை வெளியே கொண்டுவர நடவடிக்கை எடுப்பது பற்றி துணைக்கேள்வி எழுப்பியபோது பதிலளித்த சிதம்பரம், இது சம்பந்தமாக நிதி அமைச்சகம் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். கள்ள நோட்டுகள் புழக்கம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த பிரச்னை ரூபாய்க்கு மட்டும் இல்லை பிற வெளி நாட்டு கரன்சிகளிலும் கள்ள நோட்டு பிரச்னை காணப்படுகிறது என்றார். தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதி கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மத்திய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் விழிப்புடன் செயல்படுகின்றன. வெளிநாட்டு அமைப்புகள் நிதி உதவி தொடர்பான தற்போது நடைமுறையில் உள்ள 1976ம் ஆண்டைய சட்டம் மாற்றி அமைக்கப்படும் என்றார் சிதம்பரம். மாவோயிஸ்டுகளுக்கு விளம்பரம் தருவது சரியா? முன்னதாக, மம்தா பானர்ஜி லால்கருக்கு மேற்கொண்ட பேரணி பற்றிய பிரச்னை மாநிலங்களவையில் மீண்டும் எழுப்பப்பட்டது. மாவோயிஸ்டுகளுக்கு விளம்பரம் கொடுப்பது சரியா என்று மத்திய அமைச்சர் ஒருவர் நடத்திய பேரணி பற்றி (மம்தா பானர்ஜி நடத்திய பேரணியை மறைமுகமாக குறிப்பிட்டு) சிதம்பரத்திடம் பாஜக உறுப்பினர் ராம்தாஸ் அகர்வால், கேட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சிதம்பரம், இந்த கேள்வி பொதுவானதாக இருப்பதால் இதற்கு எனது பதில் மாவோயிஸ்டுகளுக்கு யாரும் ஆதரவு தரக்கூடாது. அப்படி யாராவது செய்தால் அதற்கு அரசு ஊக்கம் தராது என்றார். இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி அரை மணி நேரம் விவாதிக்க அவைத் தலைவர் ஹமீது அன்சாரி அனுமதிக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர் அகர்வால் கோரினார். ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ப்பு மாவோயிஸ்டு அமைப்பின் சதிவேலை: மாவோயிஸ்டு இயக்கத்தின் அமைப்பு ஒன்று ரயில்வே பாதையை தகர்த்ததால்தான் மே 28ம் தேதி ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்தது என விசாரணையில் தெரியவந்தது என அவையில் பதிலளித்து பேசுகையில் சிதம்பரம் மேலும் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அண்மை காலத்தில் ஞானேஸ்வரி ரயில் கவிழ்ப்பு உள்ளிட்ட பெரிய தாக்குதல்களை நக்ஸல்கள் நடத்தியுள்ளனர் என்பதை அரசு ஒப்புக்கொள்கிறது என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.

Exit mobile version