2009 மே-ல், மாவோயிஸ்ட் அரசு பதவி விலகிய பின் நடைபெறும் முதல் மக்கள் இயக்கம் இது. அதி காலை முதல் ஏராளமான பேருந்துகளில் வந்த மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் தலைநகர் காத்மண்டுவில் குவிந்தனர். அரசின் தலைமையகம் அமைந்துள்ள சிங்கதர்பார் கட்டிடத்தை முற்றுகையிட இவர்கள் அணிவகுத்துச் சென்றனர்.
மாவோயிஸ்ட்டுகளின் தலைமைச் செயலக முற்றுகைக்கு பிரச்சந்தா என்று அழைக்கப்படும் புஷ்ப கமல் தஹால், கிரண் என்ற மோகன் வைத்யா ஆகியோர் தலைமையேற்றனர். மக்களாட்சியை நிலை நிறுத்தவும், தற்போதைய அரசை பதவியிறக்கம் செய்யவும் இப்போராட்டம் நடத்தப்படுவதாக மோகன் வைத்யா கூறினார்.
உண்மையான மக்களாட்சியை நிறுவ நாம் களம் இறங்கியுள்ளோம் என்று மோகன் வைத்யா தொண்டர்களிடம் கூறினார். இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்வியக்கத்தில் மூன்று லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள சிங்கதர்பார் கட்டிடத்துக்கு செல்லும் எட்டு சாலைகளிலும் முற்றுகை நடைபெறுகிறது. பிரச்சந்தா, வைத்யா தவிர, பாபுராம் பட்டாராய், நாராயண் காஜி ஸ்ரேஸ்தா, சி.பி. கஜூரல் மற்றும் கிருஷ்ண பகதூர் பஹாரா ஆகியோர் எட்டுசாலைகளிலும் முற்றுகைக்கு தலைமையேற்று வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான அதிரடிப்படையினர் செயலகத்தைச் சுற்றி நிறுத்தப் பட்டுள்ளனர். பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் மாவோயிஸ்ட்டுகள் நுழைவதைத் தடுப்பதற்காக பாதுகாப்பு வளையம் நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி அசுதோஸ் ராணா கூறினார்.