லண்டனில் மாவீரர் நிகழ்வுகளில் 20 ஆயிரம் அளவிலான தமிழர்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதே வேளை
ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி உயிர்துறந்ததை நினைவுகூரும் இந்த நாள் இலங்கையில் ஒடுக்கு முறைக்கு எதிரான மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் அடையாள நாளாக தோற்றம் பெற்றுள்ளது. வட கிழக்கில் இராணுவம் மற்றும் உளவுப் படைகளின் கொடிய ஆக்கிரமிப்பிற்கு மத்தியில் பல பகுதிகளில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. உயிரையும் மதிக்காமல் நினைவஞ்சலி செலுத்தும் மக்களின் ஒடுக்கு முறைக்கெதிரான எதிர்ப்புணர்வு இன்றைய வடக்கு கிழக்கின் போர்க்குணத்தின் குறியீடு.
இலங்கை அரச படைகள், அவற்றின் துணைக்குழுக்கள், உளவுப்படைகள் போன்றன மாவீரர் தினத்தில் அஞ்சலி செலுத்த முயன்ற மக்கள் மீது ஒழுங்குடுத்தப்பட்ட தாக்குதல்களை நடத்தின.
இவ்வாறு உணர்வுமிக்க மக்கள் கூட்டத்தை இலங்கை அரசிற்கு எதிரான போராட்டத்தை நோக்கி அணிதிரட்ட அரசியல் தலைமைகள் இல்லை என்பது துயர்தரும் விடயமாகும். இலங்கை அரசியலில் தலையிடுவதாகவும் ஒடுக்கப்படும் தமிழ் தேசிய இனம் தொடர்பான முடிவுகளை தாமே மேற்கொள்வதாகவும் புலம் பெயர் நாடுகளில் தோன்றியுள்ள அமைப்புக்களைப் பொறுத்தவரையில் மாவீரர் தினம் தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான சடங்கு.
மக்களுக்காகப் போராடி மரணித்துப் போன தமது உறவினர்களுக்காக ஒன்றுகூடும் மக்களில் பலர் இன்று புலம் பெயர் தலைமைகளின் அரசியல் பிழைப்புவாதத்தோடு இணங்கவில்லை.
குறிப்பாகப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்களையும் பொதுவாக அனைத்துப் போராளிகளையும் நினைவு கூருவோம் என்ற முழக்கத்தை மாவீரர் தின ஒழுங்கமைப்பாளர்கள் முன்வைத்தாலும், நிகழ்வு ‘புலம்பெயர் புலிகள்’ அடையாளத்துடனேயே நடைபெற்றது.
தமது வசதிக்காகச் சடங்காக மாற்றப்பட்டுள்ள மாவீரர் தின நிகழ்வு புரட்சிகரமான நிகழ்வாக மாற்றப்பட வேண்டும். மக்கள் சார்ந்த அரசியலின் மற்றொரு அங்கமாக இது மாற்றப்பட வேண்டும்.